குள்ளநரி கறி விருந்து; கம்பி எண்ணும் இளைஞர்! 

Youth arrested under Wildlife Protection Act in trichy

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வயலூர் அருகே இனாம்புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷின் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின் படியும், திருச்சி வனச் சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படையினர், கடந்த நவம்பர் 29 அன்று இனாம்புலியூர் கிராம தெற்கு மேட்டுத்தெருவைச் சேர்ந்த சி. லட்சுமணன் என்பவரின் மகன் ல. அய்யர் (26) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது குள்ளநரியின் தோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அய்யரிடம் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இனாம்புலியூர் கிராம காட்டுப் பகுதியில் வேட்டை நாயை வைத்து குள்ளநரியை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டு, தோலை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அய்யர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அய்யரை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5முன்புஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அய்யர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe