Skip to main content

‘செல்போனில் பேச மாட்டாயா? என்னை கட்டிக்கிறியா?’-மாணவியை வழிமறித்த வாலிபர் கைது!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

 Youth arrested for misbehaving with student

 

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் ரயில்வே துறை ஊழியர் புருஷோத்தமன்(27). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரைத் தினமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது வழிமறித்து என்னுடன் செல்போனில் பேச மாட்டாயா? என்னை கட்டிக்கிறியா? என்று கூறி கிண்டல் செய்துள்ளார்.  

 

இதுகுறித்து பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். அதன் பின்னர் அவரது பெற்றோர் பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார், போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனைக் கைது செய்தனர். மேலும் அவரின் நண்பர்களான ராம் உள்பட 3 பேரைத் தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.