Skip to main content

கஞ்சா கடத்தல் கும்பலிடம் சிக்கிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
youth arrested jolarpet railway police for cannabis

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு வழியாக ஒடிஷா மாநிலத்திலிருந்து கேரளா மாநிலம் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வாலிபர் ஒருவர் கஞ்சா கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின் போது, கழிவறையில் பதுங்கியிருந்த ஒரு இளைஞரை பிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா மகன் ஷாகுல்ஹமீத் (21) என்பதும், இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. 

அப்படி வேலை தேடி அலையும் இளைஞரிடம், கஞ்சா கடத்தல் கும்பல் ஆசை வார்த்தைகள் கூறி அவர்கள் பேச்சில் மயங்க வைத்துள்ளனர். ஆசை வார்த்தைக்கு மயங்கிய ஷாகுல்ஹமீத், கஞ்சா கடத்தி வரத் துவங்கியுள்ளார். வெற்றிகரமாக ஒருமுறை வடமாநிலத்திலிருந்து கடத்தி வந்த 5000 ரூபாய் கூலியாகத் தரப்படுவதாகக் கூறியுள்ளார். பின்னர் கஞ்சா கடத்திய இளைஞரை கைது செய்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், அவரை ராணிப்பேட்டை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.