போதையில் அலப்பறை; பரிதவித்த  எஸ்.ஐ - கண்ணாமூச்சி ஆட்டமாடிய கும்பல்!

Youth arrested for arguing with SI while intoxicated

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் சாலையில் நடந்து செல்லும் போதும், தண்ணீர் எடுக்க வரும் பொழுதும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் பெண்கள் மீது டார்ச் லைட் அடிப்பதும் , பெண்களை கேலி செய்தும் வருவதாக மாசார்பட்டி காவல் நிலையத்துக்கும், விளாத்திகுளம் டிஎஸ்பி அலுவலகத்துக்கும் பொதுமக்கள் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜூன் 4 ஆம் தேதி புதன்கிழமை இரவு மாசார்பட்டி போலீஸ் எஸ்.ஐ. முகேஷ் அரவிந்த் தனது புல்லட்டில் மற்றொரு காவலருடன் சேர்ந்து வெம்பூர் கிராமத்தில் ரவுண்ட்ஸ் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கோயில் அருகே பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த நான்கு இளைஞர்களை கூப்பிட்டு கண்டித்து வீட்டுக்குப் போக சொல்லி அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்துள்ளனர். சற்று நேரம் கழித்து எஸ்.ஐ. முகேஷ் அரவிந்த் அந்தப் பகுதிக்கு மீண்டும் வந்தபோது, அங்கு அதே இடத்தில் மது போதையில் இருந்த அந்த இளைஞர்களை பார்த்து கோபமடைந்த எஸ்.ஐ. முகேஷ் அரவிந்த் போலீஸ் பாணியில் அவர்களை முறைப்படி கவனித்துள்ளார்.

அப்போது போதையில் இருந்த கும்பலுக்கும் எஸ்.ஐ .முகேஷ் அரவிந்துக்கும் இடையே தள்ளுமுள்ளும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அப்போது போதை இளைஞர்களுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்துறை குறித்து தரக்குறைவாக அசிங்கமாக பேசி வாக்குவாதம் செய்தனர். அப்போது, ‘எழுத்துப்பூர்வமா உனக்கு புகார் வந்திருக்கா... அப்படி எதுவும் வராமல் எதுக்கு எங்க பசங்கள நீ அடிக்கிற....’ என கேட்டு அவரை சுத்தி வளைத்தனர். மேலும், தங்களது மொபைல் போனில் மாறி மாறி வீடியோ எடுத்து, இங்கே சாதிப் பிரச்சனை வரும் என மிரட்டியுள்ளனர்.

Youth arrested for arguing with SI while intoxicated

இந்த தகராறு நடந்து கொண்டிருந்த சமயத்தில், எஸ்.ஐ. முகேஷ் அரவிந்த் வந்த புல்லட்டின் சாவியை போதை கும்பல் எடுத்து வைத்துக் கொண்டு அவரை மணிக்கணக்கில் பரிதவிக்க விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு மற்றொரு சாவி எடுத்து வரப்பட்டு பின்னர் எஸ்.ஐ. முகேஷ் அரவிந்த் அங்கிருந்து புல்லட்டில் காவலர் ஒருவருடன் காவல் நிலையத்திற்கு விரத்தியுடன் திரும்பி உள்ளார்.

இதனிடையே இது குறித்த வீடியோவை கெத்து காட்டுவதற்காக போதை கும்பல் சமூக வலைதளங்களில் பரவ விட்டது. வீடியோ வைரலானதை தொடர்ந்து மாசார்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான உதயகுமார் மற்றும் மகேஸ்வரன், 24 வயதான ராமகிருஷ்ணன், 21 வயதான கருப்பசாமி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பறவை பாண்டி, ராசு குட்டி ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொது இடத்தில் கும்பலாக அமர்ந்து போதையை போட்டு கொண்டு, பெண்களுக்கு அலப்பறை கொடுத்தது மட்டுமில்லாமல், போலீஸ் எஸ்.ஐ.யிடம் மல்லுக்கட்டி அவரது வாகனத்தின் சாவியை பறித்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு கெத்து காட்டிய போதை கும்பலின் அத்துமீறலும், வீடியோ வெளியான பிறகு அவர்களை போலீசார் கைது செய்து சிறைக்குள் தள்ளி இருக்கிற சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பையும், விளாத்திகுளம் சப் டிவிஷன் போலீஸ் மத்தியில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

arrested police sub Inspector Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe