/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1001_105.jpg)
சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்(என்ற)கருக்கா ஸ்டீபன்(22). நேற்று முன்தினம்(7.3.2024) வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். வீட்டின் அருகே வந்தபோது மர்ம நபர்கள் ஸ்டீபனை காரில் கடத்தி சென்றனர். இதனை கண்டதும் அவரது பெற்றோர் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நசரத்பேட்டை போலீசார் ஸ்டீபனை கடத்தி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை, மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வந்த தகவலையடுத்து நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும் அங்கிருந்து இரண்டு பேர் கத்தியுடன் தப்பி ஓடியுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த ஸ்டீபன் உடல் அருகே போதையில் மயங்கி கிடந்த விக்னேஷ், ஈசாக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் மலையம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(22), அன்பு(21), ஈசாக்(23), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விக்னேஷ் தரப்புக்கும், ஈசாக் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இரு தரப்பினரும் அடிக்கடி மாறி, மாறி தாக்கிக் கொண்ட சம்பவமும் அரங்கேறி இருந்தது.
கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் நண்பரான பிரவீன் என்பவரின் செல்போனை ஸ்டீபன் பிடுங்கி கொண்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகமானது இதனால் ஸ்டீபனை தீர்த்து கட்ட முடிவு செய்த ஈசாக் தரப்பினர், அதிக போதையில் காரை வாடகைக்கு எடுத்து கொண்டு ஸ்டீபனை காரில் கடத்தி சென்று மலையம்பாக்கம் பகுதியில் வைத்து கொலை செய்ததும், கொலை செய்த பிறகு அதிக போதையில் இருவர் இருந்ததால் தப்பிச் செல்ல முடியாமல் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து போதை ஊசிகள் சிலவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)