chair table

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெண் ஊராட்சி தலைவர்களின் நிர்வாகத்தில் கணவர்கள், உறவினர்கள் தலையீடு இருக்கக்கூடாது என ஒன்றிய அதிகாரிகள் அவசரமாகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சித் தலைவர்களின் அவசரக்கூட்டம் மங்களூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆணையர்கள் தண்டபாணி, சங்கர் மற்றும் துணை ஆணையர்கள் பாபு, சிவக்குமார் செல்வகுமாரி, பொன்னியரசி, பொறியாளர்கள் மணிவேல், ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.

Advertisment

கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் மங்களூர் ராமு, மலையனூர் தேவராஜ், சிறுப்பாக்கம் கவிதா விஜயகுமார், சி.புதூர் திருஞானசேகர், ம.புதூர் தனலட்சுமி, வள்ளிமதுரம் சுப்பிரமணியன், ஒரங்கூர் தமிழரசி உட்பட 66 ஊராட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் முக்கியமாக பெண் தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில் அவர்களது கணவர்கள் மற்றும் உறவினர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடக் கூடாது மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட திட்டப்பணிகள் பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவற்றில் அவர்கள் தலையிடக்கூடாது, மேலும் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள தலைவரின் இருக்கையில் சம்பந்தப்பட்ட தலைவரைத் தவிர மற்றவர்கள் அதில் அமரக்கூடாது என அதிரடியான அறிவிப்புகளை ஆணையர்கள் வெளியிட்டனர்.

அதேபோல் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், கிணறு அமைத்தல் ஆகிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அதன் செயல்பாடுகள் பற்றிய வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில் ஆண்கள் தலையீடு இல்லாமல் இருக்குமா? என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் கிராம மக்கள்.

Advertisment