
நடிகரும் சூழலியல் ஆர்வலருமான விவேக் மறைவை யாராலும் ஏற்க முடியவில்லை. கலாம் கண்ட கனவுகளை நிறைவேற்ற, ‘கிரீன் கலாம்’ திட்டம் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை லட்சியமாக கொண்டு இளைஞர்களையும், மாணவர்களையும் அழைத்தார். செல்லுமிடமெல்லாம் மரக்கன்றுகளை நட்டார். எந்த ஊரில் யார் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தாலும் அவர்களைப் பாராட்டவும் செய்தார்.
அதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், நீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை அறிந்து ட்விட்டரில் பாராட்டினார் நடிகர் விவேக். மேலும் அவர் கொத்தமங்கலம் வருவதாகவும் கூறியிருந்தார். கரோனா ஊரடங்கால் அந்தப் பயணத் திட்டம் ரத்தானது.இந்த நிலையில் சனிக்கிழமை நடிகர் விவேக் மறைந்த தகவல் அறிந்து துடித்துப் போன கொத்தமங்கலம் இளைஞர்கள், பெரியாளூர் குருகுலம் பள்ளி மாணவர்கள் சில மணி நேரங்களிலேயே விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் பலரது வீடுகளிலும் நடுவதற்குமரக்கன்றுகள் கொடுத்ததுடன், விவேக்கின் லட்சியம் நிறைவேற அவர் மண்ணுக்குள் புதைக்கப்படுவதற்குள் மரக்கன்றுகளை நடுவோம் என்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்த செய்தி நக்கீரன் இணையத்தில் வீடியோவாகவும் படங்களுடன் செய்தியாகவும் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சின்னக்கலைவாணருக்கு அஞ்சலி செலுத்தி அவரது லட்சியத்தையும் நிறைவேற்றினார்கள்.
இந்த செய்திகளையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா, ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், “இறைநிகர் கலாம் அவர்கள் பெற்றெடுக்காத பெருமகர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் சமூகப் பற்றுதான் கலாம் அவர்களின் கனவான பசுமையைக் காக்க வேண்டும் என்பது. கலாமின் செல்வபுத்திரனைக் காலம் கடத்திச் சென்றுவிட்ட அன்றைய தினமே, என்னை இந்தப் பூமிக்குத் தந்த என் புதுக்கோட்டை மாவட்ட கொத்தமங்கலம் இளைஞர்கள் பசுமைக் கன்றுகள் நட்டு ஊடகத்தில் பேசு பொருளாக மாறினீர்கள். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள், என் அன்பிற்கினிய கொத்தமங்கலம் இளைஞர்களை நான் வணங்கி வாழ்த்துகிறேன்.ப்ரியமுடன் உங்கள் தம்பி ராமையா..” என்று உருக்கமாக பேசியுள்ளார். இந்த ஆடியோ வேகமாக பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)