Skip to main content

மனைவி குழந்தைகளை பிரிந்த சோகம்; பிணையில் வந்த கணவர் கோயிலில் தூக்கிட்டு தற்கொலை! 

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

youngster passed away in temple

 

சேலம் அருகே, திருமண உறவுக்கு வெளியே ஏற்பட்ட தவறான தொடர்பால் இரண்டு குழந்தைகள் உள்பட ஒரு குடும்பமே பலியான சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கணவாய்புதூர் ஊராட்சி, கே.மோரூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவருடைய மனைவி மரகதம் (30). இவர்களுக்கு செல்வகணபதி (7), கோகுலகண்ணன் (5) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். பிரபாகரன், தன்னுடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அதே தோட்டத்தின் ஒரு பகுதியில், சிறிய அளவில் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையும் நடத்தி வந்தார். 

 

இந்நிலையில் அவருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த பிப். 14ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. விரக்தி அடைந்த மரகதம், தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடுவார்களே எனக்கருதிய மரகதம், பிப். 14ம் தேதியன்று, தங்களது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரு குழந்தைகளையும் தூக்கி வீசி எறிந்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு, அவரும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

 

இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பிரபாகரன் நடத்தி வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு உள்ளூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இதையறிந்த மரகதத்தின் பெற்றோர், பிரபாகரன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

இந்த சம்பவத்திற்குப் பிறகு பிரபாகரன், தனது மனைவியை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தியதோடு, அவரை தற்கொலைக்கு தூண்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதன்பிறகுதான் மரகதம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கில் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபாகரன், பிணையில் விடுதலை ஆனார். மனைவி, குழந்தைகள் இல்லாமல் வீட்டில் தனிமையில் இருந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அக். 5ம் தேதி இரவு கே.மோரூரில் இருந்து தலையாரியூர் பகுதிக்கு வந்த பிரபாகரன், தனது குலதெய்வ கோயிலான அண்ணமார் கோயிலுக்குச் சென்றுள்ளார். திடீரென்று அந்தக் கோயிலுக்குள் சென்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


இந்நிலையில் வியாழக்கிழமை (அக். 6) கோயிலுக்கு வந்த பக்தர்கள், பிரபாகரன் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஓமலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 


திருமண உறவுக்கு வெளியே ஏற்பட்ட தவறான உறவால், அப்பாவி குழந்தைகள் உள்பட ஒரு குடும்பமே பலியான சம்பவம் கே.மோரூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்