/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_242.jpg)
சேலத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண் மருத்துவரை ஸ்க்ரூ டிரைவரை காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சேலம், கொண்டலாம்பட்டி அருகே, திருப்பூரைச் சேர்ந்த 25 வயதான பெண் மருத்துவர் ஒருவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் தனியாக வீடு எடுத்துத் தங்கியுள்ளார். திங்கள்கிழமை (ஜூன் 20) இரவு 11.30 மணியளவில், வீட்டில் வழக்கமான வேலைகளை முடித்து உறங்கச் சென்றார். அப்போது திடீரென்று மர்ம நபர் ஒருவர், அவரை நெருங்கியுள்ளார். இதில், அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர் சுதாரிப்பதற்குள், அந்த மர்ம நபர், கையில் வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவரை காட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கலக்கம் அடைந்த பெண் மருத்துவர் கத்தி கூச்சல் போட்டார். அவருடைய வீட்டின் அருகே உள்ள வாலிபர் ஒருவர், மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்றார். அதற்குள் அந்த மர்ம நபர், அங்கிருந்து வெளியேறி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். பக்கத்து வீட்டு வாலிபர், மர்ம நபரை தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பித்து விட்டார். மர்ம நபர், சீலநாயக்கன்பட்டி வழியாகச் சென்றதால் அப்பகுதியில் பணியில் இருந்த இரண்டு எஸ்.ஐக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் சந்திரகலா, நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (32) என்ற வாலிபர்தான், பெண் மருத்துவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ஸ்க்ரூ டிரைவரை காட்டி மிரட்டியதும், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சில நாள்களுக்கு முன்பு, பெண் மருத்துவர் வீட்டின் அருகில் கார்த்திக் பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர், பெண் மருத்துவரின் நடவடிக்கைகளை ஜன்னல் வழியாக கண்காணித்து வந்துள்ளார்.
அவர் வீட்டில் தனியாக இருப்பதையும், அவர் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவார், பணிக்குச் செல்வார் என்பதையும் ரகசியமாக நோட்டமிட்டு வந்துள்ளார். இதையடுத்து, சம்பவத்தன்று பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கில் அவருடைய வீட்டுக்குள் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடந்து வருகிறது.
Follow Us