n

தஞ்சையில் இளம்பெண் ஒருவர் உறவுக்கார இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தஞ்சை மாவட்டம் கொசுவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் தாய் தந்தையை இழந்த தன்னுடைய சகோதரி மகளை தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார். 22 வயதான அப்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தீபாவளிக்காக தாய் மாமா பிரபு வீட்டிற்கு இளம்பெண் வந்துள்ளார். தொடர்ந்து பிரபு கடந்த 17ஆம் தேதி உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் பொழுது தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் 33 வயது இளைஞரான கருப்பசாமி என்பவரிடம் தனது சகோதரி மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடும் படி கூறியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர், உறவுக்காரர் தானே என்ற நம்பிக்கையில் கருப்பசாமியின் இருசக்கர வாகனத்தில் அப்பெண் ஏறி உள்ளார். தாய்மாமன் பிரபு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் கருப்பசாமியுடன் புறப்பட்ட இளம்பெண் வீட்டுக்கு வராததால் கருப்பசாமியை, பிரபு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்பொழுது தாங்கள் அருகில் வந்துவிட்டதாக கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆனால் வெகுநேரமாகியும் கருப்பசாமியும் அப்பெண்ணும் வராததால் சந்தேகமடைந்த பிரபு, மீண்டும் கால் செய்துள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே பிரபு உறவினர்களுடன் சாலை பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது பதற்றுத்துடன் கருப்பசாமி மட்டும் தனியாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். 'எங்கே என் சகோதரி மகள்' என கருப்பசாமியிடம் பிரபு கேட்டுள்ளார். அதற்கு கருப்பசாமி, இரண்டு பேர் மிரட்டி அவரை கடத்தி சென்று விட்டதாக கதறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஊரின் பல பகுதிகளிலும் இளம்பெண்ணை தேடினர். இந்நிலையில் அடுத்த நாள் காலை முதலை முத்துவாரி ஏரிபகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் வெளியானது. அங்கு சென்று பார்த்த பொழுது அது தனது அக்காள் மகள் சடலம் என்பதை கண்ட பிரபு அதிர்ந்து போனார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் கருப்பசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கருப்பசாமியை இளம்பெண்ணை கடத்திச் சென்று ஏரியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் தன்னை காட்டிகொடுத்து விடுவார் என்ற பயத்தில் கொலை செய்ததும் தெரியவந்தது. ஆனால் இதனை மறைத்து தாய்மாமன் பிரபுவிடம் இருவர் வழிமறித்து இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக கதையளந்து விட்டிருக்கிறார் கருப்பசாமி. திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன கருப்புசாமிக்கு 5 மாதத்தில் குழந்தை ஒன்று உள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வல்லம் காவல்துறையினர் கருப்பசாமியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.