
ஈரோடு மாவட்டம், சிக்கரசம்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் தவமணி (19). இவருக்கு கடந்த பிப்ரவரியில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(26) என்பவருடன் திருமணமானது. கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களாக தவமணி சுரேஷை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். தவமணிக்கு வலிப்பு நோய் இருப்பதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக தவமணிக்கு மன உளைச்சலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெரியூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற தவமணி சம்பவத்தன்று இரவு திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தவமணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து, சத்திமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.