ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பட்லூர் அருகே கெம்பியாம்பட்டியைச்சேர்ந்தவர் அழகம்மாள் (54). இவரது கணவர் தவசியப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் காவத்தலா என்கிற கலாமணி (19). கலாமணிக்கு கடந்த சில வருடங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வயிற்று வலி நேரங்களில் அவரால் சரியாக சாப்பிட முடியாமல் வேதனைப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அழகம்மாள் கூலி வேலைக்கு வெளியே சென்றுவிட்டார். அவரது மூத்த மகளும் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார். கலாமணி மற்றும் வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்து அழகம்மாள் இரவு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டினார். ஆனால் பதில் ஏதும் இல்லை. கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியால் கதவை கடப்பாரையால்திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கலாமணி வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டுத்தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியானஅழகம்மாள், மகளை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே கலாமணி இறந்துவிட்டதாகத்தெரிவித்தார். இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.