/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pdu-woman-art-1.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயியான இளமுருகன். இவரது மனைவி தனுசுவள்ளி. கர்ப்பினியாக இருந்த இவருக்கு ஆலங்குடி அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர் மருத்துவ பரிசோதனைகள் சிகிச்சைகள் பெற்றுள்ளார். கடந்த 9ஆம் தேதி இரவு தனுசுவள்ளிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்தில் குழந்தையை பார்த்து தாய்ப்பால் ஊட்டிய தனுசுவள்ளிக்கு சிகிச்சை நடந்துள்ளது. அதன் பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு மயக்க நிலைக்கு சென்றவர் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்துள்ளார்.
இதனைப் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தனுசுவள்ளியை பரிசோதனை செய்து பார்த்து உடல்நிலை மோசமாக உள்ளதால் உடனே திருச்சி தனியார் மருத்துமனைக்கு அனுப்ப வேண்டும் என்று அங்கிருந்து ஆம்புலன்சில் ஏற்றிச் சென்று திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தனுசுவள்ளி மூளை செயலிழந்துவிட்டது என்று கூறி ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால பல லட்ச ரூபாய் செலவாகியிருந்தது. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அசைவற்றுக்கிடந்த தனுசுவள்ளியை கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருந்தது. தனுசுவள்ளியின் குழந்தை உறவினர்கள் பராமரிப்பில் உள்ளார். ஆலங்குடி தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் தனுசுவள்ளி உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறந்த தன் குழந்தையை ஒரு முறை பார்த்ததோடு சுயநினைவிழந்த தனுசுவள்ளி உயிரிழந்துவிட்டாரே என்று உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)