பாலியல் தொல்லை; உயிருக்கு அச்சுறுத்தல் - டி.எஸ்.பி. மீது இளம்பெண் பரபரப்பு புகார்! 

Young woman alleges  against Thoothukudi police DSP

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் 24 வயது பெண் ஒருவர், பிகாம் படித்து முடித்துவிட்டு அங்கே உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் நெல்லை சரக டி.ஐ.ஐ.யிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி கங்கா பரமேஸ்வரி காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது அருகில் யாரும் இல்லாத சமயம் பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி தென்மலை தென்குமரன் என்பவர் ஆபாசமான சினிமா பாடல்களை பாடிக்கொண்டு ஆபாச சைகை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்ய முயன்றார். நான் சுதாரித்து அங்கிருந்து என் வீட்டுக்கு வந்து விட்டேன்.

இது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத காலமாக சிறையில் இருந்த அவன் ஜாமீனில் வெளிவந்த நிலையில் ஜனவரி 29 ஆம் தேதிஎன் வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து கத்தியுடன் வந்து என்னை மிரட்டினான். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் சிப்காட் காவல் நிலையத்தில் ரவுடி தென்மலை தென்குமரன் மீது மீண்டும் புகார் அளித்தேன். அங்கு நடவடிக்கை எடுக்காததால் காலதாமதத்தை ஏன் எனக் கேட்டபோது ரூரல் டிஎஸ்பி சுதீரை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தினர். இதன் காரணம் அறிந்தபோது தான், என் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என டிஎஸ்பி சுதீர் காவல் நிலைய அதிகாரிகளை அறிவுறுத்தியது தெரிந்தது.

Young woman alleges  against Thoothukudi police DSP

பின்னர் பிப்ரவரி 11ஆம் தேதி நெல்லை சரக டி.ஐ.ஜி.யை சந்தித்து புகார் மனு கொடுத்தேன். அதன் பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் முடித்துக் கொண்டு எந்தவித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் இந்த வழக்கு சிப்காட் காவல் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அங்கிருக்கும் பெண் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி நேரில் வந்து சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தினார். நான், சாட்சிகள், என் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து பதிவு செய்யப்பட்டது.இதனிடையேசில நாட்கள் கழித்து டிஎஸ்பி சுதீர் நான் வேலை பார்க்கும் என் நிறுவன உரிமையாளரை நேரில் வரவழைத்து பேசினார். அன்றிலிருந்து இந்த வழக்கை வாபஸ் பெறும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது.

Young woman alleges  against Thoothukudi police DSP

பின்னர் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமியின் அணுகுமுறையும் திடீரென மாறியது. என் நிறுவன மேலாளரையும் சாட்சிகளையும் மறைமுகமாக அச்சுறுத்தினர். இது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நெருக்கடியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதால் மனமுடைந்த நான், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். இந்த நிலையில் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் ரவுடி தென்மலை தென்குமரனை தூண்டி எனக்கு எதிராக பொய்யான புகார் மனு பெற்று என் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிப்காட் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைப் பற்றி கேட்டபோது தூத்துக்குடி எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக டி.எஸ்.பி சுதீர் கூறிவிட்டார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் மீது ஏப்ரல் 8ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. விசாரணைக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எனக்கு எதிராக செயல்படுவதால் விசாரணையில் நம்பிக்கை இல்லை. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என டிஐஜியிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார். வேறு அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்துவதாக டி.ஐ. ஜி. அலுவலக தரப்பு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

police Thoothukudi young girl
இதையும் படியுங்கள்
Subscribe