Young people who pretended to be customers and stole money!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில், எபினேசர் என்பவருக்கு சொந்தமான ஸ்கூல், காலேஜ், டிராவல் பேக்குகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை கடை ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கடையில் மதியம் சுமார் 2 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் பொருட்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது அதில் ஒருவருக்கு கடையின் உரிமையாளர் பொருட்களை எடுத்து காண்பித்துக் கொண்டிருந்தார். மற்றொரு நபர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, வியாபாரி எதிர்பாராத நேரத்தில் கையில் கொண்டு வந்த கட்டைப்பையில் கடை உரிமையாளரின் பணம் மற்றும் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய சிறிய பை ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டு இருவரும் அங்கிருந்து உடனடியாக கிளம்பி சென்றுள்ளனர்.

Advertisment

அவர்கள் சென்றவுடன் தன்னுடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த எபினேசர், சிசிடிவி காட்சிகளை பார்த்த போது உண்மை தெரியவந்துள்ளது. அந்த சிறிய பையில் இருந்த தன்னுடைய ரூ. 23 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து சிசிடிவி காட்சிகள் அடங்கிய சாட்சியங்களுடன் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

புகாரை வாங்கிக் கொண்ட பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் திருடியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.