புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் எஸ்.பி.முத்துக்குமரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈர்ப்பில் படிக்கும் காலத்திலேயே இயக்கப் பணிகள் செய்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று போராடி வெற்றி வாகை சூடியவர்.

Advertisment

அவரது செயல்பாடுகளால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள் மனதிலும் நின்றவர். இளம் வயதிலேயே கட்சியில் பல உயர்ந்த பதவிகளுக்கு வந்தவர் 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்குப் பிறகு புதுக்கோட்டை மக்களின் நலப்பணிகள் சிறப்படைந்தது. ஒரு வருடம் மட்டுமே அந்தப் பணிகள் நடந்தது. அதன் பிறகு கார் விபத்தில் மரணம் அடைந்தார். ஒரு வருடத்தில் தொகுதி மக்களிடம் மட்டுமின்றி சட்டமன்றத்திலும் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்றும் சுருக்கமாக அதிகமான கேள்விகளை கேட்ட உறுப்பினா் என்ற பெயரையும் பெற்றார்.

Advertisment

 Young people who donated shoes to public school students

தோழர் முத்துக்குமரனின் இறப்பை அந்தக் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சி தலைவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அனைத்து தரப்பு மக்களும் கண்ணீர் வடித்தனர். தோழர் நல்லக்கண்ணு சுடுகாடு வரை 2 கி.மீ நடந்து சென்று அஞ்சலி செலுத்தி கண் கலங்கினார்.

அவரது மறைவுக்குப் பிறகு நெடுவாசல் மட்டுமின்றி பல கிராம இளைஞர்கள் இணைந்து (கட்சிகள் பாகுபாடின்றி) எஸ்.பி.எம். அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் நலப்பணிகள் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு கஜா புயலில் பாதிக்கப்பட்ட பலருக்கு தற்காலிக வீடுகள் அமைக்கவும், தொழில் உதவிகள், வீட்டுக்குவீடு தென்னை மற்றும் பலவகை மரக்கன்றகள் வழங்கினார்கள். ஆலங்குடி, பேராவூரணி தொகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுமார் 10 ஆயிரம் காலணிகளை வழங்கினார்கள்.

Advertisment

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 540 மாணவர்களுக்கு கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் மூலமாக காலணிகளை வழங்கினார்கள். காலணிகள் வழங்கிய இளைஞர்கள் மாணவர்களிடம் பேசும் போது..

இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இளைஞர் மன்றத்தினர் நீர்நிலைகளை சீரமைத்து கரைகளில் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கிறோம். பனைமரக் காதலர்கள் 30 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளனர். இதுபோன்ற பொதுப் பணிகளில் மாணவர்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது.

ஸ்டைல் என்ற பெயரில் தலையில் கோடு போடுவது, ஒரு பக்கம் வெட்டுவது, குடுமி போல வைத்துக் கொள்வது, குருவிக் கூடு போல தலைமுடியை வைத்துக் கொண்டு தலைமுடியை அலங்கோலம் செய்து கொண்டு பள்ளிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.

தொடா்ந்து சலூன் கடைகளிலும் பள்ளி மாணவர்களுக்கு சிகை அலங்காரம் என்ற பெயரில் கோடு போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.