Skip to main content

வெளிமாநிலத்தில் இருந்து வந்த இளைஞர்கள்... அரசுப் பள்ளியில் தங்கவைக்க மக்கள் எதிர்ப்பு!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020
Young people from outer state...

 

சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்திக்  கொண்டிருக்கும் கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு வர விரும்பினால் முறையான அரசு அனுமதியுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்த அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலைக்காக சென்றவர் பலர் சேலம் வந்து அங்கிருந்து திருச்சி 2 பேர், புதுக்கோட்டை மாவட்டம் 18 பேர், சிவகங்கை 21 பேர் என மொத்தம் 41 பேர் ஒரு பேருந்தில்  வந்துள்ளனர்.  ‌இதில் திருச்சியில் 2 இறங்கிய பிறகு இலுப்பூரில் சிலர் இறங்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்ட போது அங்கு சோதனையில் இருந்த அதிகாரிகள் அவர்களை பரிசோதனை செய்துள்ளனர். அதில் 5 பேர்களுக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருந்ததால் அவர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதிக்காமல் இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  


‌இதை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களை இலுப்பூரில் தங்க வைக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன் புதுக்கோட்டையில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ராணியார் மருத்துவமனை, பழைய மாவட்ட மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் வலியுறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தும் போது,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரில் 3 பேர் மட்டுமே இலுப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நோய் தொற்று ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனாலும் வெளிமாநிலத்தில் இருந்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக  அவர்களை சில நாட்கள் மட்டும் தங்க வைத்து பரிசோதனைகள் செய்து அவர்களை வீட்டிற்கு அனுப்ப இருக்கிறோம் என்று சமாதானம் பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 18 பேரும் இலுப்பூர் அரசு மகளிர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்