Young people brutally incident a friend

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் 17 வயது ராமச்சந்திரன். 12ஆம் வகுப்பு வரை படித்த ராமச்சந்திரன் படிப்பை பாதியில் நிறுத்தி மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றி சர்க்கரை ஆலைக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்து வந்துள்ளார். தந்தை கலியபெருமாள் பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்துபோக, இவரது மூத்த சகோதரியும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் குடும்பத்தின் சோக நிலையை கருத்தில் கொண்டு தன் உழைப்பின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி வந்தார் ராமச்சந்திரன். இவரது தாய் மணிமேகலை கரும்பு வெட்டச் செல்லும் பணி செய்து வந்துள்ளார். அதன் காரணமாக அவர் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு ஈரோடு பகுதிக்கு சென்றுள்ளார். அதனால் ராமச்சந்திரன் தனது பாட்டியுடன் ஊரிலேயே தங்கி மாட்டு வண்டி ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ராமச்சந்திரன் தனது ஊரில் உள்ள கடைக்கு கூல் ட்ரிங்ஸ் வாங்குவதற்கு சென்றுள்ளார். அதேநேரம் அவரது ஊரைச் சேர்ந்த நண்பர்கள் மோகன்ராஜ் (20), கந்தசாமி (18) ஆகிய இருவரும் மது போதையில் ராமச்சந்திரனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து தப்பித்து ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த இருவரும் மேலும் இரு சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது ராமச்சந்திரனின் சத்தம் கேட்டு அவரது பாட்டி கூச்சல் போட்டு கத்தியுள்ளார். அதனால்அந்த நான்கு பேரும் தப்பித்து ஓடியுள்ளனர். இதனிடையே ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ராமச்சந்திரனைகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனக் கூறிய ராமச்சந்திரனின் உறவினர்கள் கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisment

இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மடப்பட்டு பகுதியில் கஜேந்திரன்(19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் விசாரணை செய்தனர். அதில், மோகன்ராஜ், கந்தசாமி, கஜேந்திரன் மற்றும் பிடிபட்ட அந்த 17 வயது சிறுவன் ஆகிய நால்வரும் ராமச்சந்திரனை வீடு தேடிச் சென்று வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராஜ், கந்தசாமி ஆகிய இருவரும் ஏற்கனவே கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இருவர் மீதும் திருவெண்ணைநல்லூர், திருநாவலூர்காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தவர்கள் தற்போதுராமச்சந்திரனை கொலை செய்துள்ளனர். ஏற்கனவே ராமச்சந்திரன் இவர்களுடன் நண்பராகப் பழகியுள்ளார். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, கைது செய்யப்படுவது, ஜெயிலுக்கு செல்வது என வாழ்க்கை மாறியதால் அவர்களுடன்பழகுவதை ராமச்சந்திரன் நிறுத்தி உள்ளார். சிறைக்கு சென்று வந்த பிறகு ராமச்சந்திரன் தங்களுடன் பேசவில்லை என்ற கோபம், மேலும் தங்களைப் பற்றி ராமச்சந்திரன் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்து தாங்கள் கைது செய்யப்படகாரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மோகன்ராஜ், கந்தசாமி இருவரும் அவரது சக நண்பர்களுடன் சேர்ந்து ராமச்சந்திரனை கொலை செய்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.