வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ்(41). இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், அந்த பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். பொதுமக்கள் நடமாடும், இடம், வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் பாம்புகள் புகுந்தால், அதனைப் பிடித்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விடுவதை தொழிலாக செய்து வருகிறார். இதனிடையே இவருக்கு அதிகளவில் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்திய தேவராஜ், சந்தபேட்டை சவுக் செக்குமேடு பகுதியில் தள்ளாடியபடி நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக சாலையி ஓரத்தில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதனைப் பார்த்த தேவராஜ் பாம்பை பிடித்து, பொதுமக்களிடம் வித்தை காட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக தேவராஜை பாம்பு கடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரி மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் தேவராஜ் உயிரிழந்தார். பாம்பை வைத்து வித்தை காட்டிய தேவராஜ் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.