
செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் சென்னை கூவம் ஆற்றில் தவறி விழுந்த நிலையில், 8 மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் அந்த இளைஞரை மீட்டனர்.
சென்னை பெரியமேட்டை சேர்ந்த ஒரு இளைஞர் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரை அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்பொழுது நேப்பியர் பாலம் அருகே வந்த அவர் பாலத்தை ஒட்டி கூவம் ஆறு தெரியும்படி செல்ஃபி எடுக்க முயற்றுள்ளார். அப்பொழுது தவறி கூவம் ஆற்றில் விழுந்த அந்த இளைஞர் உதவிக்காகச் சத்தமிட்டுக் கத்தியுள்ளார். ஆனால் சத்தம் யாருக்கும் கேட்காததால் விடிய விடிய கூவம் ஆற்றில் விழுந்த பகுதியிலேயே இருந்துள்ளார். செல்ஃபோனும் ஆற்றுக்குள் விழுந்ததால் யாரையும் அழைக்க முடியாத நிலையில், நீந்தி கரை சேரலாம் என்றாலும் அந்த இடத்தில் அதிக சகதி இருந்ததால் இடத்தைவிட்டு நகர முடியாமல் இருந்துள்ளார். அதனையடுத்து காலை விடிந்ததும் மீண்டும் அவர் சத்தமெழுப்ப, இதனைக்கண்டவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். அதனைத்தொடர்ந்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கயிறு மூலம் அந்த இளைஞரை மீட்டனர்.