Skip to main content

நகைக்காகவா? கடனுக்காகவா? - 72 வயது மூதாட்டி கொடூரக் கொலை

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

young man went run after passed 72-year-old woman in Villupuram

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள மாரங்கியூர் ஊரைச் சேர்ந்தவர் தாண்டவராயன். இவரது மனைவி 72 வயது மூதாட்டி இந்திராணி. இவருக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இந்திராணியின் கணவர் தாண்டவராயன் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன்களுக்கு திருமணம் ஆகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மூன்று மகள்களும் வெவ்வேறு ஊர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு வசித்து வருகிறார்கள். இந்திராணி மட்டும் சொந்த ஊரில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சிவசங்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி இந்திராணியிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அந்தக் கடனை இந்திராணியிடம் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திராணி சிவசங்கரிடம் கொடுத்த பணத்தைத் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்று முன் தினம் 100 நாள் வேலைத்திட்டப் பணிக்கு இந்திராணி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிவசங்கர் இந்திராணியிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு இந்திராணி என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்காததால் சென்னையில் உள்ள இந்திராணியின் மகன்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து மகன் பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து வந்து ஊரில் பல இடங்களில் தேடியிருக்கிறார். அப்படியும் கிடைக்காததால் பன்னீர்செல்வம் கோரிவினைநல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்திராணியை சிவசங்கர் அழைத்துச் சென்றது தெரியவரவே, போலீசார் சிவசங்கரை தேடியுள்ளனர். ஆனால், சிவசங்கர் தலைமறைவாகி விட்டார். 

 

இதையடுத்து, சிவசங்கரின் வீட்டைத் திறந்து சோதனையிட்ட போலீசார், வீட்டிற்குள் இந்திராணி கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர். தாசில்தார் பாஸ்கர்தாஸ் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் இந்திராணி உடலை சிவசங்கரின் வீட்டில் இருந்து தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் இரும்புக் கம்பியால் அடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான காயங்களும், அவரது இரண்டு காதுகளும் அறுக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளது. இதன் மூலம் சிவசங்கர் கடனைத் திருப்பித் தருவதாக அழைத்துச் சென்று இந்திராணியை கொலை செய்து அவர் அணிந்திருந்த பத்து பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டில் அவரை புதைத்து விட்டுத் தலைமறைவாகி இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவான சிவசங்கரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் மாரங்கியூர் கிராமத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்