
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி என்பவரின் மகன் ஜெயராமன் (25). இன்று ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்டம் பேராவூரணி வாரச் சந்தையில் வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் பொருட்கள் வாங்க புறப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்துவரும் ராஜசேகரன் என்பவரின் மகன் அறிவுக்கரசு (12) உடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
சந்தையில் பொருள் வாங்க பணம் பத்தாது அதனால பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஏ.டி.எம் மில் பணம் எடுத்து வருவோம் என்று ஒரு வழிப்பாதையில் பைக்கில் சென்று சாலையில் யூடர்ன் போட்டு அடுத்த சாலையில் பயணிக்க முயன்ற போது பட்டுக்கோட்டை சாலையில் இருந்து பேராவூரணி நோக்கி வந்த லாரி மோதி சிறுவன் அறிவுக்கரசு உள்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த தகவல் இருவரின் கிராமமான பாலகிருஷ்ணபுரம் கிராமத்திற்கு தெரிய வர கிராமமே சோகத்தில் மூழ்கியது. அறிவுக்கரசு விபத்தில் உயிரிழந்த தகவல் வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்ட போது அங்கேயே கதறிய ராஜசேகரன் உடனே சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார்.
சந்தைக்கு காய்கறி வாங்கப்போன இடத்தில் நேர்ந்த விபத்தில் வாழ வேண்டிய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த இவர்களின் குடும்பங்களில் இவர்களே ஆண் குழந்தைகள். ஒவ்வொரு வீட்டிலும் தலா ஒரு சகோதரி உள்ளனர்.