ADVERTISEMENT

மது போதையில் ஞாயிறுகளில் நடக்கும் கொலைகள்; அதிர்ச்சியில் மக்கள்

11:17 AM Oct 03, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ஆறுமுகம் - அருள்

ADVERTISEMENT

கீரமங்கலம் வேம்பங்குடி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் அருள் (45). சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நூற்றுக்கணக்கான கார்களுடன் பிரபலமான மாப்பிள்ளை டிராவல்ஸ் வைத்து நடத்தியவர். ஏதோ சில காரணங்களால் சொந்த ஊருக்கு வந்து கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை(1.10.2023) இரவு தனது உறவினரும் நண்பருமான அதே ஊரைச் சேர்ந்த செல்வம் மகன் ஆறுமுகத்துடன் கீரமங்கலம் சந்தைப்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் ஆறுமுகம் ஒரு கத்தியால் அருளை சில இடங்களில் குத்தியுள்ளார். அவரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற அருளின் பின்னாலே சென்ற ஆறுமுகம் கழுத்து, தலை, முதுகு என 9 இடங்களில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அருள் அங்கேயே சரிந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருளை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்ப தயாரானபோது சிகிச்சை பலனின்றி அருள் உயிரிழந்தார். இதனையடுத்து நேற்று அருளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அருளை கொலை செய்த ஆறுமுகத்தை பொதுமக்களே பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகராற்றில் ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்த்தனர்.

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கீரமங்கலம் அருகே உள்ள கிராமங்களில் கட்டட வேலை செய்து வந்த அய்யாச்சாமி மகன் முருகன்(30), மற்றும் அவரது ஊரை சேர்ந்த முருகனின் உறவினர்களான தன்னக்குட்டி மகன் தனசேகரன்(29), தன்னக்குட்டி மகன் தங்கச்சாமி(53) உட்பட 5 பேர் கீரமங்கலம் அண்ணாநகர் கட்டிட ஒப்பந்தக்காரரான லெட்சுமணனிடம் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் மேற்பனைக்காடு கிராமத்தில் கட்டடம் கட்டும் இடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்த நிலையில் ஏப்ரம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முருகன் தனசேகரன், தங்கச்சாமி ஆகியோர் கீரமங்கலம் வந்து மது குடித்துவிட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த போது, முருகனுக்கும் தனசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வாக்குவாதம் முற்றி தனசேகரன் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து முருகன் மண்டையில் பலமாக தாக்கியதால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் கீழே சாய்ந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதியில் நின்றவர்கள் தனசேகரனை பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதே போல கடந்த ஆண்டு மே மாதம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் அருள்(38). கீரமங்கலம் சந்தைப் பேட்டை பகுதியில் இரவு நேர உணவு விடுதி நடத்தி வருகிறார். இரவு கடை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்ற போது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நடுவழியில் நின்றுள்ளது. தனது நண்பரை பெட்ரோல் வாங்கி வரச் சொல்லிவிட்டு நின்ற போது அருகில் உள்ள வீட்டில் நின்ற நாய் குறைத்ததால் அருள் நாயை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்த நாயின் உரிமையாளருக்கும் அருளுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அருள் அங்கிருந்து மீண்டும் கீரமங்கலம் நோக்கி சென்ற போது வேம்பங்குடி மேற்கு அண்ணாத்துரை மகன் தினேஷ் (30), கீரமங்கலம் தர்மர் கோயில் தெரு அண்ணாத்துரை மகன் மதன் (எ) சுரேஷ்குமார் (22) ஆகியோர் அருளை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருள் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்ற நிலையில் மயக்கமடைந்து வாந்தி எடுத்ததால் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கீரமங்கலத்தில் கடந்த சில மாதங்களில் டாஸ்மாக் கடைகள் அருகே, கடைவீதிகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் மது போதையில் அடுத்தடுத்து 3 கொலைகள் அதுவும் உறவினர்களை உறவினர்களே கொன்ற சம்பவம் தொடர்ந்து அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT