Skip to main content

சிறுமி கடத்தி வன்கொடுமை! இளைஞருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை! 

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

Young man sentenced 25 years in pocso act

 

அரியலூர் மாவட்டம், சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜதுரை(22). இவர், கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, சம்பந்தப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அப்போது அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


அந்த புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் மஹாலட்சுமி ராஜதுரை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றம் ஜாமீனில் ராஜதுரை வெளியே வந்தார். 


இந்த நிலையில், அது சம்பந்தமான வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வழக்கறிஞர்கள் வாதம் முடிவுற்ற நிலையில், கடந்த 17ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ராஜதுரைக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பையடுத்து ராஜதுரையை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரியலூரில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.