
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் சாலையில் உள்ள கல்லாத்தூரைச் சேர்ந்தவர் சுதாகர்(35). இவரது தாய் தந்தை இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். திருமணமாகாத சுதாகர் தனியாக வாழ்ந்துவந்தார். கூலி வேலைக்குச் செல்லும் இவர் நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, ஊர் சுற்றி வருவது என இருந்துவந்தார்.
இந்த நிலையில், கல்லாத்தூரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை கழிப்பறை அருகே நேற்று அதிகாலை அந்தப் பகுதி வழியே சென்றவர்கள் இளைஞர் ஒருவர் ரத்தம் வழிந்தோடிய நிலையில் இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். அருகே சென்று பார்த்தபோது அது சுதாகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ் தலைமையிலான போலீசார் கல்லாத்தூர் டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்து, அங்கு கொலை செய்யப்பட்டுக் கிடந்த சுதாகர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சுதாகர் எப்படி கொலை செய்யப்பட்டார், யார் காரணம் என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்கும் பழக்கம் அதிகமுள்ள சுதாகருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் சுதாகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.