
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் பேக்கரி முன்பாக வாலிபர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வத்தலக்குண்டு அருகே மலையப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர் வத்தலக்குண்டில் உசிலம்பட்டி பிரிவில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்துவிட்டு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென்று வந்த இரண்டு மர்ம கும்பல் சாமி துரையை அரிவாளால் சரமாரியாக வெட்டத் தொடங்கியது. காயத்தோடு வெளியே தப்பி ஓடிய சாமிதுரையை விடாமல் துரத்தி சென்று நடுரோட்டில் வைத்து அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. இச்சம்பவத்தில் சாமிதுரை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாமிதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாமிதுரை உறவினர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உடனே ஸ்பாட்டிற்கு சென்று விசாரணை செய்ததுடன் மட்டுமல்லாமல் உடனடியாக குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இப்படி பட்டப்பகலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.