
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ளது விகேஷ் கார்டன் பகுதி. இங்கு வசிக்கும் ரமேஷ் என்பவருடைய 18 வயது மகன் ராகுல்,தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று (25.04.2021) மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்கள் சிலருடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். ராகுலுக்கு நீச்சல் தெரியாததால் குளிக்காமல் கரையில் அமர்ந்து நண்பர்கள் குளிப்பதை ஆர்வமாக பார்த்து ரசித்துள்ளார்.
பிறகு நண்பர்கள் சென்றபிறகு அசாத்திய துணிச்சலுடன் ஆர்வமிகுதியால் கிணற்றில் இறங்கி தனியாக குதித்துள்ளார். அப்போது தண்ணீரில் மூச்சுத் திணறி மூழ்கியுள்ளார் ராகுல். தங்களது மகனைக் காணாமல் அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். பிறகு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில், சம்பந்தப்பட்ட கிணற்றில் நண்பர்கள் குளிக்கும்போது ராகுல் அங்கிருந்ததாக தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள் துணையுடன் சுமார் 4 மணி நேரம் கிணற்றில் தேடி, ஐம்பது அடி ஆழத்திலிருந்து ராகுலின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ராகுலின் உடலை அனுப்பிவைத்தனர். மேலும், ராகுல் இறந்தது குறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். நீச்சல் தெரியாத காரணத்தினால் இளைஞர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை நகரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us