
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டி தகரகளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (24). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தார். நேற்று (19.20.2021) காலை அதே பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதைப் பார்த்ததும் உடன் இருந்தவர்கள், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் தெரிவிக்கவே அனைவரும் சென்று பார்த்தபோது நாகராஜ் நீரில் மூழ்கிவிட்டார்.
சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் முழுவதுமாக நீர் நிரம்பி இருந்ததால் வாலிபரின் உடலை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதால், 8 மின்மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
இதேபோல், நவீன கேமரா மூலமும் கிணற்றில் வாலிபரின் உடலைத் தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், சுமார் 11 மணி நேரத்திற்குப் பின்னர் இறந்த வாலிபர் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்தக் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.