Young man body found in well

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நம்பி குளம் பகுதியில் வசித்து வருபவர் பிச்சாண்டி. இவரது மகன் கெங்கமுத்து(35). கூலித் தொழிலாளியான இவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி மற்றும் அவரது பெற்றோர் இவரை காணாமல் பல்வேறு இடங்களில் தேடினர்.

Advertisment

அதையடுத்து எலவாசனூர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் கெங்கமுத்துவை தேடிவந்தனர். இந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள காளி கோயில் அருகே இருக்கும் ஒரு கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Advertisment

அதையடுத்து தீயணைப்புத் துறை குழுவினர் உதவியுடன் அந்த சடலத்தை கிணற்றிலிருந்து போலீசார் வெளியே கொண்டு வந்தனர். அந்த உடல் காணாமல் போன கெங்கமுத்து என்பதை அவரது மனைவி மற்றும் உறவினர் உறுதி செய்தனர். கிணற்றின் பக்கவாட்டு சுவரில் கெங்கமுத்து படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருந்தும் கெங்கமுத்து மனைவி, அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கெங்கமுத்து மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.