Young man arrested in Thillai for threatening women via instagram

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தனது பெற்றோருடன் வந்து நேற்று புகார் மனு அளித்தார்.

Advertisment

அந்த புகாரில், தன்னிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த விஷ்வம் (29) என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி தன்னுடன் பழகி வந்ததாகவும், அதன்பிறகு தன்னை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தன்னிடமிருந்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், மடிக்கணினி, ஐ-போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளா தேவி நேற்று வழக்குப்பதிவு செய்து, தில்லை நகரில் வீட்டிலிருந்த விஷ்வாவை மடக்கி பிடித்தனர். அவரது வீட்டில் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் நகைகளைப் பறிமுதல் செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், இசிஇ படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் பழகி அவர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இவ்வாறு அவர் வீசிய வலையில் சிக்கிய பெண்களுடன் உல்லாசமாக இருந்து, அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன், பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என்று அவ்வப்போது மிரட்டி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளைப் பறித்துள்ளார். இதுவரை சென்னையைச் சேர்ந்த மாணவி உட்பட ஏராளமான பெண்களிடம் பல லட்சக்கணக்கான ரூபாய் பறித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது மடிக்கணினியில் 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் இருந்தன. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி நகை, பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 2 மடிக்கணினி, 2 செல்போன்கள், நகைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisment