Skip to main content

இளம்பெண் காயங்களுடன் சாலையோரத்தில் அழுத சம்பவம்!!! விசாரணையில் சிக்கும் முக்கிய பிரபலங்கள்? நடந்தது என்ன...

 

incidentதமிழகத்தில், வடமாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களை வீட்டு வேலைக்கென அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் சப்-இன்ஸ் பெக்டர் உள்ளிட்ட ஐந்து பேர் கைதாகியிருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி மதியவேளை, தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டிக்கும், சானூராப்பட்டிக்கும் இடையில் இருபதுவயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் உடல்முழுவதும் பலத்த காயங்களுடன் சாலையோரத்தில் நடக்கமுடியாமல் அழுதுபுரண்டபடிக் கிடந்தார். அதே நாளில் அப்பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். கொளுத்தும் வெயிலில் இளம்பெண் ஒருவர் எழுந்து நடக்கமுடியாமல் தவித்ததைக் கண்ட மாதர்சங்க பெண்கள் பதறித்துடித்து அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

incidentமருத்துவமனைக்குச் சென்ற அந்த இளம்பெண்ணோ யாரைக் கண்டாலும் பயத்தில் நடுங்கி கூனிக்குறுகினார். மாதர் சங்கத்தினர் உன் பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம். கவலை வேண்டாம் என சைகையில் ஆறுதல் கூறினர். அந்த இளம்பெண் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பேசும் மொழியும் முதலில் புரியவில்லை, என்றாலும் அவர் இருக்கும் நிலைமையை யூகித்து அவர் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து, அந்த இளம்பெண் விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தஞ்சை மாவட்ட எஸ்.பி. மகேஷ்வரனிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து மாதர் சங்கத்தினர் நம்மிடம், "21 வயதான அந்தோரா என்கிற இளம்பெண் மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் பிறந்து பிழைப்புத் தேடி சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு குடும்பத்துடன் வந்து பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார். பெங்க ளூரில் உள்ள அவரது சித்தி மகள் சாந்தா என்பவர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவன் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு எனக்கூறி முன்பணம் கொடுத்து அந்தோராவை அழைத்து வந்திருக்கிறான்.

அந்த வீட்டில் ஏற்கனவே சில இளம்பெண்கள் இருப்பதும், அவர்கள் பாலியல் தொழிலில் சிக்கிக் கொண்டிருப்பதையும் சிலநாட்களில் தெரிந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு முடியாமல், உதிரப்போக்கால் துடிதுடித்து தன்னை பெற்றோர்களிடம் திருப்பி அனுப்பி வைக்குமாறு போராடியிருக்கிறார், அதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் அந்தப் பெண்ணை கொடூரமாக அடித்து, இனிமேல் இந்த பெண்ணால் பயனில்லையென முடிவெடுத்து, யாராவது பார்த்தாலும் வடமாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரென நினைத்துக்கொள்வார்கள் என்று திட்டமிட்டு வெட்ட வெளியில் காரிலிருந்து உதைத்து தள்ளிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்கிறார்கள்.

 

incidentஇந்த விவகாரம் குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடராஜபுரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான செந்தில்குமார், அவரது மனைவி ராஜம், பிரபாகர், ராமச்சந்திரன், புதுக்கோட்டை பழனிவேல் ஆகிய 5 பேரையும் போலீசார் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

கைதாகியுள்ள பிரபாகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்தவர். லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அதோடு விபசாரத்திற்குப் பயன்படுத்திய தஞ்சை மேலவஸ் தாசாவடியிலுள்ள ஒரு பங்களா, நடராஜபுரம் காலனியில் ஒரு சொகுசு வீடு, மருத்துவக்கல்லூரி சாலையில் ஒரு பங்களா என மூன்று வீட்டிற்கு சீல்வைத்துள்ளனர். மேலும் நான்கு சொகுசு கார்கள், பல லட்சம் பணம், ஒரு டைரி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த டைரியில் அரசியல் பெரும்புள்ளிகள், காக்கிகள், அதிகாரிகள் என பலரது தொடர்பு எண்களும் வாடிக்கையாளர்கள் வரிசையில் இருப்பதாக விசாரணை காக்கிகள் கிசுகிசுக்கின்றனர்.

என்ன நடந்தது என விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினரிடம் கேட்டோம், ""தஞ்சை மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார்தான் இந்த கும்பலின் தலைவன். வட மாநிலங்களில் வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள இளம் பெண்களை குறிவைத்து வீட்டு வேலைக்கு என புரோக்கர்கள் மூலம் பேசி அதிக பணம்கொடுத்து அழைத்துவந்துவிடுவான். இதற்காகவே பல மாநிலங்களில் ஏஜெண்டுகளை வைத்திருக்கிறான். இங்கு வந்ததும் செந்தில்குமாரின் மனைவி ராஜம் அந்த பெண்களிடம் ஆசையான வார்த்தைகளையும், அலங்காரமான ஆபரணங்களையும் மாட்டிவிட்டு, இவ்வளவு பெரிய வீட்டில் நீ வேலைக்காரப் பொண்ணு இல்ல, இங்க நீதான் ராணி என ஆசையாக கூறி நைசாக பேசி நாகரிக உடைகளை உடுத்தி விதவிதமாக போட்டோ எடுப்பார்கள்.

அந்த போட்டோக்களை தங்களிடம் கஸ்டமர்களாக இருக்கும் அனைவருக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பிவைப்பார்கள், பின்னர் கஸ்டமர் தேர்வுசெய்யும் பெண்ணை நைசாக பேசி விபசாரத்திற்கு உட்படுத்துவார்கள், ஒப்புக்கொள்ளாத பெண்களை போட்டோக்களை வலைத் தளத்தில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டுவார்கள். வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் பெண்களை கஸ்டமர்கள் வீட்டிற்கே காரில் அனுப்பி வைப்பார்கள். சில கஸ்டமர்களை செந்தில்குமாருக்கு சொந்தமான சொகுசு வீடுகளில் ஏதாவது ஒன்றுக்கு வரவழைத்து அந்த பெண்களை அனுப்புவார்கள். இதுபோக கஸ்டமருடைய காரிலேயோ, அல்லது செந்தில்குமாரிடம் ஆடம்பர பெட் வசதிகளுடன் கூடிய இரண்டு சொகுசு காரிலோ ஆன்லைன் விபச்சாரத்தொழிலை செய்துள்ளனர்.

தஞ்சையில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக போலீஸ் குடியிருப்புக்கு பக்கத்திலேயே இது நடந்திருப்பதுதான் வேதனை. சாதாரண துணிக்கடை வைத்திருந்த செந்தில்குமார் பாலியல் தொழிலால் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறான். இந்த செந்தில்குமாரின் முதல் மனைவி காவல்துறை ஆய்வாளர், இவனது செயல்களைப் பார்த்து விவாகரத்து செய்துவிட்டார். அதற்கு பிறகுதான் ராஜம் சேர்ந்திருக்கிறார்.

இவர்கள் செய்யும் விபச்சாரத் தொழிலுக்கு காவல்துறை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும், எஸ்.ஐ.யாக இருந்து சஸ்பெண்டாகியிருக்கும் பிரபாகரன் பார்த்திருக்கிறார். பிரபாகரன் வல்லம் காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போதே அவர்களோடு பார்ட்னர் ஆகிவிட்டார். அதேபோலதான் புதுக்கோட்டை அருகேயுள்ள கள்ளுக் குடியை சேர்ந்த பழனிவேலும், கஸ்டமர் பிடித்துக்கொடுக்கும் வேலைகளைச் செய்துள்ளான்.

இவனைப் போல தமிழகம் முழுவதும் அவர்களுக்கு நெட்வொர்க் இருக்கு. சோதனையின்போது செந்தில்குமாரின் மனைவி ராஜம் பயன்படுத்திய ஒரு டைரி, நான்கு செல்போன்களை நடராஜபுரம் வீட்டிலிருந்து கைப்பற்றினோம். அந்த டைரியில் கஸ்டமர்களாக போலீஸ்காரர்கள், வி.ஐ.பி.கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என முக்கிய புள்ளிகள் பலருடைய பெயர்கள் போன் நம்பருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

அந்த டைரியில், தமிழகம், வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த பெண்களின் விபரம், அவர்கள் தங்கியிருந்த நாட்கள், இடங்கள் அவர்களுக்கு கொடுத்த பணம், அவர்களோடு தங்கிய கஸ்டமர்கள் என எல்லா விவரங்களும் எழுதப்பட்டிருந்தது. அதன்படி கஸ்டமர்கள் யார் யாரெல்லாம் செந்தில்குமாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளது. இதனால் கஸ்டமர்களாக இருந்த பல அரசியல் பிரமுகர்களும், வி.ஐ.பி.க்களும் மனப்புழுக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

செந்தில்குமார் ஆன்லைன் மூலம்தான் இந்த தொழிலை செய்திருக்கிறான். இதற்காக தனியாகத் துவங்கியுள்ள வெப்சைட்டில் பெண்களின் படங்களை பதிவிட பெண்களை தேர்வுசெய்யும் கஸ்டமர் அவரது அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வேண்டும். பணம் அனுப்பிய பிறகே பெண்ணை அனுப்பிவைப்பான். இதுதவிர தனது நம்பிக்கைக்குரிய கஸ்டமர்களின் வாட்ஸ்அப்க்கு பெண்களின் படங்களை அனுப்பிவைப்பான். கஸ்டமர்களின் ரகசியம் காக்கப்பட்டு தொழில் அமோகமாக நடந்திருக்கிறது என்கின்றனர் விவரமாக.

"குடும்ப கஷ்டத்தை போக்க வீட்டு வேலைக்கு வந்தேன். என்னை வீட்டு வேலைக்குன்னு அழைத்துவந்தவர் பணத்துக்காக இதுபோன்ற இடத்துல சேர்த்துவிட்டுட்டார். என்னோட தமிழ் தெரிந்த மூன்று பெண்களும் அந்த வீட்டில் இருந்தனர், அவங்களோட நிலைமையும் என்னோட நிலைமை போலத்தான், அவர்களையும் எப்படியாவது மீட்டுடுங்க'' என கைகூப்பி கேட்டார் என அந்த வடமாநிலப் பெண் கூறியதாக, மாதர் சங்க தலைவி தமிழ்ச்செல்வி கூறுகிறார். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால்தான் முறையாக இருக்குமெனவும் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனோ, "வழக்குப் பதிவுசெய்து ஐந்து பேரை கைதுசெய்துள்ளோம், விசாரணை நடக்கிறது, அந்தப் பெண்ணுக்கு உரிய நியாயம் கிடைக்கும்.’ அதோடு அந்த கும்பலின் நெட்வொர்க் பெருசா இருக்கு விரைவில் அனைவரையும் கைதுசெய்வோம்'' என்கிறார் ஆர்வமாக.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்