புதுச்சேரியில் தன் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே, மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் செல்வி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் ஆகி இந்த தம்பதிக்கு 8 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு செல்வி வந்துள்ளார். தனது தாய் வீட்டிற்கு வந்த செல்வி 17ஆம் தேதி இரவு வெளியூரில் வேலை பார்க்கும் தனது கணவர் சரவணனுடன் போனில் பேசியுள்ளார். அப்போது போனில் பேசிக்கொண்டே வீட்டின் மொட்டை மாடியில் நடந்து கொண்டே சரவணனுடன் செல்வி பேசியுள்ளார்.

Advertisment

incident

அப்போது திடீரென செல்வி, கவனக் குறைவால் மொட்டை மாடியில் இருந்து விழுந்ததாகக் சொல்லப்படுகிறது. போனில் பேசும்போது மொட்டை மாடியின் சுற்றுச்சுவர் கிட்ட வந்து பேசியுள்ளார், சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருந்துள்ளதால் செல்வி கால்தவறி தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மொட்டை மாடியின் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் தவறி விழுந்து இறந்தார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சியின் மூலம் செல்வி தவறி விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.