Skip to main content

காதலிக்க சொல்லி டார்ச்சர்! பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை! 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Young girl passed away in kanniyakumari

 

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் மருதங்கோடு இலங்கவிளை பகுதியை சேர்ந்தவர் காவியா (20 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து விட்டு எம்.ஏ. படிக்க விண்ணப்பித்து இருந்தார். இதே போல் காவியாவின் பக்கத்து ஊரான இலுப்பைவிளையைச் சேர்ந்த ரகு என்பவரின் மகன் ரஞ்சித் (20) காவியா படித்த அதே கல்லூரியில் படித்து வந்தார்.

 

ஒரே கல்லூரியில் படித்து வருவதால் அவர்கள் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மேலும் கலலூரிக்கு சென்றுவரும்போது ஒன்றாகவே பயணித்துள்ளனர். அதே போல், ஊரில் சந்திக்கும் போதெல்லாம் நெருங்கி பேசி வந்துள்ளனர். அதேபோல், ரஞ்சித்தும், காவியாவும் சேர்ந்து நின்று ஏராளமான போட்டோக்களும் செல்பிகளும் எடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில், கடந்த ஓராண்டாக ரஞ்சித், தன்னை காதலிக்கும்படி காவியாவை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு காவியா மறுத்துள்ளார். மேலும் ரஞ்சித், “என்னை காதலிக்கவில்லை என்றால் உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் உன் பெற்றோரையும் நிம்மதியாக வாழ விட மாட்டேன்” என மிரட்டியுள்ளார்.

 

இந்த விஷயத்தை காவியா பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் பெற்றோர்கள், மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். இதையறிந்த ரஞ்சித் காவியாவை தொடர்புகொண்டு, “போலீசில் புகார் கொடுத்தால் நீயும் நானும் சேர்ந்து இருக்கும் போட்டோவை போலீசிடம் கொடுப்பேன். மேலும் அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு உன்னை அசிங்கப்படுத்துவதோடு உன்னை வெளியில் நடக்க விடாமல் செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

 

இந்த நிலையில், காவியாவை பெற்றோர், அவர்களது உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். அங்கு சென்ற காவியா அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ முடித்த ஷெர்லின் புரூஸ் (20) என்பவருடன் பழகியுள்ளார். இதனால் உறவினர்கள் காவியாவை பெற்றோர் வீட்டில் கொண்டு விட்டனர். இந்நிலையில் ரஞ்சித், காவியாவுடன் தான் நெருக்கமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பரவச் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த காவியா 10-ம்  தேதி மாலை வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவரின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இதையடுத்து போலீசார், ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதையடுத்து ரஞ்சித் தலைமறைவாகியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார்.