Advertisment

‘என் மகள கொன்னுட்டாங்க..’; கண்ணீர் விடும் குடும்பத்தினர் - இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Young girl lost their life due to dowry violence

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகே அமைந்துள்ள ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேகர் - முத்துலட்சுமி தம்பதி. இந்த தம்பதியின் மகள் ஆர்த்தி என்கின்ற தனலட்சுமி. 20 வயதான இவர், கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில், தனது மகளுக்குத்திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்த சேகர் - முத்துலட்சுமி தம்பதி, அவருக்குத்திருமண வரன் பார்த்து வந்தனர்.அதன்படி, தனலட்சுமிக்கும் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தபழனி என்பவரின் மகன் 24 வயதான முரளி கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதத்தில் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது, அவர்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு குறைந்த அளவில் வரதட்சணை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்களது குடும்பத்தில் காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதற்கெல்லாம் பணம்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே முரளி குடும்பத்தினர் தனலட்சுமிக்கு தொல்லை கொடுக்கத்தொடங்கினர். உன்னுடைய வீட்டிற்குச் சென்று மேலும் பணம் வாங்கிக்கொண்டு வா என தனலட்சுமியை தினந்தோறும் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், குடி போதைக்கு அடிமையான முரளி தனது மனைவி தனலட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போதெல்லாம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் எனகணவன் மனைவி சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். ஆனாலும், இவர்களுக்குள் தினந்தோறும் தகராறு நடந்துகொண்டே இருந்தது.

Advertisment

Young girl lost their life due to dowry violence

பெண்வீட்டார் கொடுத்த வரதட்சணை போதாது என்று தனலட்சுமியிடம் மீண்டும் பணம் கேட்டு முரளி மட்டுமின்றி அவரது தாய், தந்தை என அனைவரும் சேர்ந்துகொண்டு கொடுமை செய்துள்ளனர்.இதனால் மனமுடைந்த தனலட்சுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனலட்சுமி தனது சகோதரனுக்கு வாட்ஸப்பில் ஒரு குரல் பதிவு அனுப்பியுள்ளார். அதில், ‘கணவன் வீட்டார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் இங்கிருந்தால் எந்த நேரமும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே தந்தையுடன் வந்து தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு..’ தனலட்சுமி அந்த குரல் பதிவில் பேசியுள்ளார். இதைக் கேட்டவுடன் தனலட்சுமி குடும்பத்தார் மிகுந்த கலக்கத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதியன்று கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி, வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மாப்பிள்ளை வீட்டிலிருந்து தனலட்சுமி குடும்பத்தாரை செல்போனில் தொடர்புகொண்டு நடந்த விஷயங்களை கூறியுள்ளனர். ஒருகணம், இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக முரளி வீட்டுக்கு வந்து தங்களுடைய மகளின் உடலைப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். அதுமட்டுமின்றி, தனது மகள் தனலட்சுமியை வரதட்சணை கேட்டுக்கொடுமைப்படுத்தி கணவன் வீட்டார் கொன்றுவிட்டதாக சோழவரம் காவல் நிலையத்தில் பெண் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த தனலட்சுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில், திருமணம் ஆன 11 மாதத்திலேயே இந்த மர்ம மரணம் நிகழ்ந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Young girl lost their life due to dowry violence

இத்தகைய சூழலில், கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் குவிந்த தனலட்சுமியின் உறவினர்கள் மாப்பிள்ளை வீட்டாரை கைது செய்யக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் சாதகமாக செயல்படுவதாகத்தெரிவித்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்பாட்டுக்கு வந்த போலீசார்,போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்போது திருமணமான 11 மாதத்தில் மர்மமான முறையில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrested police dowry thiruvallur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe