ADVERTISEMENT

திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

11:01 AM Feb 06, 2024 | ArunPrakash

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (37), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த தேன்மொழிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த பின்னர் கணவன் மனைவி இருவரும் சென்னை கே.கே நகரில் தங்கி அங்கேயே வேலை செய்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் அருண்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த தேன்மொழி, இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருண்குமார் தேன்மொழியை அவருடைய தாய் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போனில் பேசி சண்டை போட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் தேன்மொழி கடுமையான மன உளைச்சலில் இருந்து நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தூக்கில் தொங்கிய தேன்மொழியை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் உயிரிழந்த தேன்மொழியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கொதித்தெழுந்த மக்கள், கணவர் அருண்குமார், மாமனார் சிவராஜ் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் குவிந்த பெண்ணின் உறவினர்கள் தேன்மொழியின் தற்கொலைக்கு காரணமான அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர்கள் கைது செய்தால் தான் சடலத்தை வாங்குவோம் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 மாதங்களே ஆனதால் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வருவாய் கோட்டாட்சியருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT