Skip to main content

சுட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞர்...பதக்கத்தை கையிலேந்தி குமுறும் இளைஞரின் தந்தை!!

Published on 04/01/2022 | Edited on 05/01/2022

 

jlk

 

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள  செட்டிக்குளம் மீன் வளர்ப்பு குளத்தை குள்ளனம்பட்டி எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகனான இருபத்தி ஆறுவயதான இளைஞர்  ராகேஷ்குமார் குத்தகைக்கு எடுத்துள்ளார்.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ராகேஷ் குமார் தனது நண்பர்களுடன் குத்தகை எடுத்த குளத்தை காவல் காத்து வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஆறு பால்ரஸ் குண்டுகள் பாய்ந்த ராகேஷ் குமாரை, உடனிருந்த  நண்பர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  

 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படை  அமைத்தனர். அதோடு  தென் மண்டல ஐ.ஜி. அன்பும் ஸ்பாட் விசிட் அடித்து குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் அருவாள்களை ஆய்வு செய்துவிட்டு திரும்பினார்.  அதைத் தொடர்ந்து ராகேஷ்குமாரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளான பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான் சூர்யா, மரியபிரபு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சில குற்றவாளிகளை  தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்

 

இந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞர் ராகேஷ்குமாரின் தந்தை மாணிக்கத்தை  சந்தித்த போது..... கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செட்டிகுளம் மீன் பிடிக்கும் குத்தகையை எனது மகனும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து எடுத்திருந்தனர். இந்த விஷயம் மேற்கு மரியநாதபுரம்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு தெரியவே எங்களிடம் வந்து நான் குளத்தில் மீன் வாங்கி வளர்த்து வருகிறேன். நீங்கள் எப்படி குத்தகை எடுக்கலாம் என்று பிரச்சனை செய்தால் நாங்கள் முறைப்படி எடுத்திருக்கிறோம் என்று கூறினோம். அப்படி இருந்தும் பிரகாஷ் பிரச்சனை செய்ததால் மீன் குஞ்சு வாங்கி குளத்தில் விட்ட பணத்தை கூட கொடுத்ததுடன், ஒரு சிலருக்கு  பணமும் கொடுத்து இந்த பிரச்சனையை அப்போது முடித்து விட்டோம். அப்படி இருந்தும் கூட கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரச்சனைக்குரிய பிரகாஷ் திடீரென பத்துக்கும் மேற்பட்டவர்களை குளத்துக்குள் இறங்கி பிரச்சனை செய்து அங்குள்ள பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி விட்டு போய்விட்டார்.

 

hjk

 

அதைப் பற்றி போலீசில் புகார் கொடுத்தோம், அப்போது இரு தரப்பினரையும் போலீசார் பேசி சமாதானப்படுத்தி அனுப்பினார்களே தவிர ஒரு பெரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்தும் பிரகாஷ்சும் அவருடைய நண்பர்களும் அவ்வப்போது  எனது மகனிடம் பிரச்சனை செய்து கொண்டுதான் இருந்தனர் அப்படி இருந்தும் வழக்கம்போல் மீன்பிடி குத்தகை குளத்தை பாதுகாத்து வந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் குளத்தை பாதுகாக்கச் சென்ற என் மகனை நாட்டுத் துப்பாக்கி போல  அவர்களே தயாரித்த பால்ரஸ் நிரப்பிய துப்பாக்கியால் ஆறுமுறை மறைந்திருந்து என் மகனை சுட்டதில் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டான். அப்படி இருந்தும் உயிர் தப்பி விடுவான் என்ற நோக்கத்தில்தான்  குற்றவாளிகள் வைத்திருந்த அரிவாளால் என் மகனின் தலையிலையும் வயிற்றிலேயும் வெட்டிவிட்டு ஓடிவிட்டார்கள்.அந்த  இடத்தில் அந்தத் துப்பாக்கியை மட்டும் பயன்படுத்தாமல் அவர்கள் பய இருந்தால் கூட என் மகன் அவர்களை எதிர்த்து நின்னு போராடியாவது  உயிர் பிழைத்து இருப்பான்.

 

அந்த அளவுக்கு எனது மகன் திறமைசாலி, என் மகன் விளையாட்டு வீரர். புட்பால், கிரிக்கெட் எல்லாம் நல்லா விளையாடுவான் புத்தாண்டை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் கூட எனது மகன் வெற்றி பெற்று முதல் பரிசாக கப்பை வாங்கிட்டு வந்து சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் என்னிடம் காண்பித்தார். அதைக் கண்டு நான் பூரித்துப் போய்விட்டு என் மகன் இந்த விளையாட்டில் தொடர்ந்து நல்லபடியா விளையாடி இது போல் பல கப்புகளை வாங்கி பெரிய ஆளாக  வருவான் என்று எதிர்பார்த்தேன். அப்படிப்பட்ட என் மகனை படுபாவிகள் கூட்டு சேர்ந்து கொலை செய்து விட்டனர். இந்த பாவம் அவர் களை சும்மா விடாது என் மகனை கொலை செய்த குற்றவாளிகளுக்கு போலீசார் தகுந்த தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்