Skip to main content

மருமகளிடம் அத்துமீறிய தந்தை அடித்துக் கொலை... மகன் கைது

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

Young arrested in father case near salem

 

சேலம் அருகே, மருமகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையைக் கட்டை மற்றும் கல்லால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள எளையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அப்பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி பட்டறையில் நெசவுத் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு, இரண்டு மகன்கள். மூத்த மகன், வீரமணி (28) கட்டடத் தொழிலாளி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விருதாசம்பட்டியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் வீரமணிக்கு திருமணம் நடந்தது. பெற்றோர் பார்த்து இத்திருமணத்தை நடத்தி வைத்தனர். 

 

புதிதாக வந்த மருமகளிடம், அவர் தனியாக இருக்கும்போது ராஜேந்திரன் அடிக்கடி தவறாக நடக்க முயன்று வந்துள்ளார். மாமனார் தன்னைத் தொந்தரவு செய்வதாக அவர் கணவரிடம் புகார் கூறியுள்ளார். இதையடுத்து வீரமணி, மனைவியை அழைத்துக்கொண்டு அவருடைய சொந்த ஊரான விருதாசம்பட்டி காட்டுவலவு பகுதியில் குடியேறிவிட்டார். 

 

மகனைப் பார்க்கும் சாக்கில் விருதாசம்பட்டிக்கு வரும் ராஜேந்திரன், அங்கேயும் மருமகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கணவரிடம் புகார் சொல்லியும், மாமனாரை அவர் பெரிதாகக் கண்டிக்காததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு வீரமணியுடன் கோபித்துக்கொண்டு, அவருடைய மனைவி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

 

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 2ம் தேதி) ராஜேந்திரன், தன் மகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். மருமகளைப் பற்றி ஆபாசமாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வீரமணி, வீட்டில் இருந்த கல்லை எடுத்து தந்தை ராஜேந்திரனின் கால்களில் போட்டுள்ளார். அப்போதும் கோபம் தணியாத அவர், கட்டையால் தந்தையை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார். 

 

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், நங்கவள்ளி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர்(பொ) முரளி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையைக் கொலை செய்த வீரமணியை கைது செய்தனர். 

 

விசாரணையின்போது வீரமணி, ''எனது மனைவிடம் தொடர்ந்து என் தந்தை தவறாக நடக்க முயன்றார். பலமுறை கண்டித்தேன். அவருடைய தொல்லை தாங்காமல் தனியாக குடித்தனம் வந்துவிட்டோம். அதன்பிறகும் என் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்தார். இந்நிலையில்தான், அவர் குடிபோதையில் என் மனைவியைப் பற்றி ஆபாசமாகப் பேசியதால் ஆத்திரத்தில் அவரை அடித்துக் கொலை செய்தேன். அவரும் அரிவாளால் என்னைத் தாக்க முயற்சித்தபோதுதான் அவரை கீழே தள்ளி கட்டை மற்றும் கல்லால் அடித்துக் கொன்றேன்'' எனத் தெரிவித்துள்ளார். 

 

இந்த சம்பவம் விருதாசம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்