ADVERTISEMENT

'அமைச்சர் வரும் நாளில் கூட சுத்தம் செய்ய மாட்டீர்களா? - கடுகடுத்த அமைச்சர்

07:30 PM Jan 04, 2024 | kalaimohan

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் அரசு ஐடிஐ அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது ஐடிஐ முதல்வர் சித்ராவிடம் இந்த ஐடிஐ எப்போது தொடங்கப்பட்டது?, எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து ஆய்வுக்காக ஒவ்வொரு பணிமனையாக செல்ல முயன்ற போது ஐடிஐயின் தொடக்கப் பகுதியிலேயே குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது.

ADVERTISEMENT

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அமைச்சர் சி.வி கணேசன் இப்படித்தான் ஐடிஐ வைத்திருப்பீர்களா? அமைச்சர் வரும் நாளில் கூட சுத்தம் செய்ய மாட்டீர்களா என்று கேட்டார். அதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்று இருப்பதாக தெரிவித்தார். அதற்கு அமைச்சர் சி.வி கணேசன் இதற்கு எல்லாம் ஐடிஐ முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தினமும் ஐடிஐ வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

அதைத்தொடர்ந்து திடீரென அங்கிருந்த கழிவறைக்குள் சென்று பார்த்து அதிர்ச்சியானார். இப்படி சுத்தமில்லாமல் இருக்கிறதே என்று தெரிவித்தார். பின்னர் ஒவ்வொரு பணிமனையாக சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினர். பயிற்றுநர்கள் பாடம் எடுப்பதை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார்.

தரமான பயிற்சியை கொடுத்து இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும் என்றார். மேலும் மாணவர்கள் சிலரிடம் ஐடிஐ படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது என்று தெரியுமா என்றும் கேட்டறிந்தார். ஒவ்வொரு பணிமனையாக சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் சி .வி கணேசன் ஆய்வு செய்தார். ஆய்வை தொடர்ந்து ஐடிஐ முதல்வர் மற்றும் அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT