
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊர்' திட்டத்தின் கீழ் திருத்தணி நகராட்சி காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட பள்ளியில் அண்மையில் தேர்ச்சி விகிதம் குறைந்திருந்தது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை ஆய்வு செய்வதற்காக அங்கு வந்திருந்தார்.
'ஏன் இந்த பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் குறைவாக உள்ளனர்?' என தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணனை நோக்கி ஆட்சியர் கேள்வி எழுப்பினார். 'ஏன் தமிழ், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. நீங்கள் எல்லாம் என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் ஆசிரியர்களாகவே இருக்க லாயக்கில்லாதவர்கள். இவ்வளவு பேர பெயில் பண்ணி வச்சிருக்கீங்க. நீங்க எல்லாம் சேர்ந்து ஒரு சமுதாயத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்க டீச்சராக இருக்கவே லாயக்கில்லை. ஒன்று ஒழுங்கா பேசுங்க. தெரியவில்லை என்றால் தெரியாது என்று சொல்லுங்கள்' எனக் கடிந்து கொண்ட ஆட்சியரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறினர்.