Advertisment

“இதற்கெல்லாம் பொறுப்பேற்று யோகி மற்றும் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” - செல்வபெருந்தகை பேட்டி!

Advertisment

இன்று (11.10.2021) காலை 10.00 மணி அளவில் அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அருகில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மீதான படுகொலை தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் கலவரத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி, மத்திய மோடி அரசைக் கண்டித்து மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெளனவிரத போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிவ. ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வபெருந்தகை கூறியதாவது, “நடந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து மௌன போராட்டத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் சார்பாக நாடு முழுவதும் கடைப்பிடித்துவருகிறோம். தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக, ஏழை, எளிய மக்களுக்கு எதிராக பாஜக அரசு அரச பயங்கரவாதத்தையும், வன்கொடுமையையும் செய்துவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் ஜனநாயக முறையில் தன்னுடைய போராட்டத்தை மேற்கொண்டிருந்த விவசாயிகள் மீது மத்தியமைச்சருடைய மகன் கார் ஏற்றி நான்கு பேரை படுகொலை செய்திருக்கிறார்.

இதன் விளைவாக ஒன்பது பேர் அங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பொறுப்பேற்று யோகி மற்றும் மோடி ராஜினாமா செய்ய வேண்டும். இது புதிதாக நடக்கும் வன்முறை அல்ல, புதிதாக நடக்கும் அரச பயங்கரவாதமும் அல்ல. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இன்று பாராளுமன்ற குழுவுடன் சென்று ஜனாதிபதியிடம் மனு அளிக்க இருக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் வழிகாட்டுதல்களோடு ஒரு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். இதுதான் எங்களுடைய கோரிக்கை. இந்த வன்கொடுமையை, அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து பாஜகவுக்கு எதிராக நாங்கள் மெளனபோராட்டத்தை அனுசரித்துவருகிறோம்” என தெரிவித்தார்.

uttarpradesh congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe