
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஜகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியதால் கடந்த மாதம் 17 ந் தேதி கனிம கொள்ளையர்களால் மினி லாரியை 2 முறை மோதி படுகொலை செய்தனர். இந்த கொலை தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வழக்கில் ஆர்.ஆர் கிரஷர் உரிமையாளர்கள் ராமையா, ராசு, ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை அடுத்து திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். கனிமவளத்துறை ஏ.டி லலிதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதானவர்கள் தரப்பில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று(23/02/2025) கிரஷர் உரிமையாளர்கள் ராமையா, ராசு, லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகிய மூன்று பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் சிபிசிஐடி போலீஸ் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
ஐந்து பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் இருந்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் திருச்சி மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

ஜவகர் அலி, கொலையாவதற்கு முன்பாகவே 70 ஆயிரம் டாரஸ் லாரி அளவிலான சட்டவிரோத கற்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராசு, ராமையா ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் உரிமம் பெற்று இயங்கிய கிரஷர் ஆகியவற்றுக்கு வருவாய்க் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர்.
இந்த புகார் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சிபிசிஐடி போலீஸ் வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரம் பகுதியில் காரைக்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் கிரஷரை ராசு, ராமையா ஆகியோர் ஒப்பந்தத்திற்கு எடுத்து, சட்டவிரோதமாக வெட்டி வைக்கப்பட்ட 490 டாரஸ் லாரி அளவிலான கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா அந்த பகுதிக்கு சீல் வைத்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட கற்களை மதிப்பீடு செய்து அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.