Advertisment

நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு உயிர்ப்பலி பிரதீபா! வைகோ 

v p

நீட் தேர்வில் தோல்வியுற்றதால் பிரதீபா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:

Advertisment

‘’மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று (04.06.2017) வெளியிடப்பட்டன. தமிழகத்தில் தேர்வு எழுதிய ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவ, மாணவியர்களுள் சுமார் 39.55 விழுக்காடு அளவில் வெறும் 45,336 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisment

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள் அமையும் என்று கூறினார். ஆனால் இரண்டே நாளில் தாம் கூறியதையும் மறத்து, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்துதான் வினாத்தாள் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார். இது முதல் கோணல்.

அடுத்து, நீட் தேர்வு எழுதும் மையங்கள் ஒதுக்கீடு செய்ததில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தமிழக மாணவர்களை அலைக்கழித்தது. கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதச் சென்ற தமிழ்நாடு மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாயினர். இது இரண்டாவது கோணல்.

இதுபோன்ற காரணங்களால் நீட் தேர்வில் தமிழகம் குறைந்த அளவில் தேர்ச்சி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது.

மத்திய அரசு நீட் தேர்வைத் திணித்ததால் கடந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழகத்தை உலுக்கியது. இந்த ஆண்டு நீட் தேர்வால் இன்னொரு மாணவியைத் தமிழ்நாடு இழந்து இருக்கின்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பெருவள்ளூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் மாணவி பிரதீபா, படிப்பில் படு சுட்டியாக இருந்ததால், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். 12 ஆம் வகுப்பில் 1125 மதிப்பெண் பெற்றார். ஆனால், நீட் நுழைவுத் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள் பெற்றதை எண்ணி மிகுந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். நேற்று மாலை எலி மருந்தை உட்கொண்ட அவர், திருண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிர் இழந்தார்.

மோடி அரசின் நீட் தேர்வு மோசடி, அனிதா, பிரதீபா ஆகிய இரு உயிர்களைப் பலிவாங்கி இருக்கின்றது. இனியும் இந்தப் பட்டியல் தொடரக் கூடாது.

நீட் தேர்வில் தேர்ச்சிபெற இயலாத மாணவ -மாணவியர், எத்தனையோ துணை மருத்துவப் படிப்புகள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெறக்கூடிய அளவுக்கு பல கல்லூரிகளில் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அவற்றில் சேர்ந்து பயில முயற்சிக்க வேண்டும். மாறாக, தற்கொலை செய்துகொள்ளும் முடிவை மேற்கொள்ளக் கூடாது என்று வேண்டுகிறேன்.

பிரதீபா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உயிர்ப்பலி தந்த அனிதா, பிரதீபா போன்ற ஏழை மாணவிகளின் மருத்துவக் கனவைப் பொசுக்கிய மத்திய பா.ஜ.க அரசும் அதற்குத் துணை போகும் தமிழக அரசும் தூக்கி எறியப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறித்து, சமூக நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைத்து வரும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்; அதுவரை சமூக நீதிக்கான போராட்டம் ஓயப்போவது இல்லை.’’

prathipa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe