ADVERTISEMENT

ரஜினியை சந்தித்து பாராட்டு பெற்றான் சிறுவன் யாசின்!

10:13 AM Jul 15, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


ஈரோட்டில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த சிறுவன் முகமது யாசின், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பாராட்டு பெற்றான்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் பாட்சா - அப்ரோஜ் பேகம் தம்பதி. இவரின் மகன் யாசின் அருகே உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளான்.

அதனை திறந்து பார்த்த போது அதில் நிறைய பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான். அந்த பையை எடுத்து சென்ற யாசின் இதுதொடர்பாக தனது ஆசிரியரிடம் கூறியுள்ளான். அந்த பையை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அதனை போலீசாரிடம் யாசினை வைத்து கொண்டு ஒப்படைத்தார்.

ADVERTISEMENT

இந்த பணத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சிறுவனின் நேர்மையை பாராட்டி அவருக்கு வாழத்துகளை கூறினார். யாசினின் குடும்பம் வறுமையில் வாடும் நிலையில், சிறுவனின் நேர்மையை பாராட்டி பல்வேறு அமைப்புகளும், பிரபலங்களும் யாசினை தொடர்பு கொண்டு பாராட்டினர். மேலும் அவருக்கு பிரபலங்கள் உதவ முன்வந்த போதும், அதனை யாசின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக யாசினின் குடும்பத்தை சந்தித்த நிர்வாகிகள், அவர்களுக்கு உதவ முன்வந்தனர். சிறுவனிடம் நிர்வாகிகள் பேசும் போது, தனக்கு எந்த உதவிகளும் வேண்டாம் என்று தெரிவித்த யாசின், நடிகர் ரஜினிகாந்தை நேரில் பார்க்க வேண்டும் என்றும், அவரின் தீவிர ரசிகன் என்றும் தெரிவித்துள்ளான். அதற்கு ஏற்பாடு செய்வதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் சிறுவனிடம் உறுதியளித்தனர்.

இந்நிலையில், சொன்னபடி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிறுவன் யாசின் மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று சென்னை அழைத்து வந்தனர். அங்கு சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பாராட்டு பெற்றான்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT