Skip to main content

நூல் விலை உயர்வு; “வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” - ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் 

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

Yarn price hike; "We will go on strike" - President of the Textile Manufacturers Association

 

கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் அச்சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தொடர்ந்து நூல் விலை ஏறி வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அறிந்த மத்திய அரசு பஞ்சு இறக்கு மதிக்கு விதித்த வரியை முற்றிலுமாக தவிர்த்து உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் பஞ்சு வரத்து அதிகமாகி இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்த்து இருந்தோம்.

 

ஆனால், நூல் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த நூலை சந்தைப்படுத்தாமல் இருப்பு வைத்து வருகின்றனர். இதனால் சந்தையில் தேவைக்கேற்ற நூல் கிடைப்பதில்லை. அதேசமயம் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இதனால் மானியத்தை நிறுத்தி, ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் சந்தைக்கு நூல் வரத்து சீராக இருக்கும். அதன் மூலம் உற்பத்தியை இயல்பாக நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும்.


தற்போது உள்ள சூழலில் நாள்தோறும் நூல் விலை ஏறி வருவதால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஆர்டர்களை முடிக்க முடியாமல் தடுமாறி வருகிறோம். புதிய ஒப்பந்தங்களைப் பெற முடியாமல் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு சந்தையில் தேவையான நூல் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். 


அவ்வாறு செய்யவில்லை என்றால், இன்னும் இரண்டு வாரங்களில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் நிரந்தரமாக கடையை மூடுவதாக முடிவெடுத்துள்ளோம். அவ்வாறு வேலை நிறுத்தம் செய்வதன் மூலமாக கரூரில் பணியாற்றக்கூடிய 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இதில், மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறும் 8,000 பேர் பாதிக்கப்படுவார்கள். வேலை நிறுத்தம் முடிவு செய்யப்பட்டால் ஏப்ரல், மே மாதங்களில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாது. சுமார் 1500 கோடி அளவுக்கு விற்பனை இழப்பு ஏற்படும்” எனத் தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்