see

Advertisment

தீரன் சின்னமலையின் 213ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 03-08-2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைற்றது.

அங்கே செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது,

நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் இந்த மண்ணை ஆள்வதற்கு தகுதிபெற்ற ஒருவர் கூடவா இங்கில்லை எனப் புரட்சி முழக்கமிட்டு தாய்நிலத்தை மீட்கத் தன்மானப் போரிட்ட வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று. அடிமைப்பட்டுக் கிடந்த அன்னை நிலத்தின் மீட்சிக்காக, அதன் விடுதலைக்காக உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி பெரும்படையாகக் கட்டி போராடி அடிமை நிலத்தை மீட்டப் புரட்சியாளர் எங்கள் மூதாதை தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றுவதில் வீரத்தமிழ் பிள்ளைகள் பெருமிதமும், திமிரும் அடைகிறோம் என்று தெரிவித்தார்.

sem

Advertisment

மேலும் சிலைகடத்தல் வழக்கு குறித்து கேள்வியெழுப்பபட்டதற்கு சீமான் கூறியதாவது,

பல வழக்குகளுக்குச் சி.பி.ஐ. விசாரணையை கோரியபோது அது தேவையில்லை என தமிழக அரசு மறுத்து வந்தது. அரசு மீது நம்பிக்கையில்லாமல் மத்தியப் புலனாய்வு விசாரணையை எங்களைப் போன்ற இயக்கங்களும், பொதுவானவர்களும் கோரினால் அது ஏற்புடையது. ஆனால், தமிழக அரசே மத்தியப் புலனாய்வு விசாரணை கோரினால் அதுவே தனது தோல்வியைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது ஆகாதா?

இராசராசசோழன் சிலையை மீட்டுக் கொண்டுவந்த போது தமிழக அமைச்சர்கள் ஐயா பொன்.மாணிக்கவேலைப் பாராட்டியிருக்கிறார்கள். அவ்வாறு விசாரணை நன்றாகப் போய் கொண்டிருக்கையில் எதற்காக சி.பி.ஐ. விசாரணை கோருகிறார்கள் என்பது புரியவில்லை. ஒரு அரசு தனக்குக் கீழ் இயங்கும் ஒரு துறையின் மீது நம்பிக்கையற்று இருக்கின்றதென்றால் பொது மக்களுக்கு அரசு மீது எப்படி நம்பிக்கை வரும்? இச்செயல் யாரையோ காப்பாற்றிவிடுவதற்கான மடைமாற்று வேலையாகத் தெரிகிறது.

Advertisment

சிலைக்கடத்தல் வழக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் சிலைகளை மீட்டுக் கொண்டுவரத்தான் மத்தியப் புலனாய்வு விசாரணை என்கிறார்கள். அதற்கு மத்திய அரசின் உதவியை நாடலாம். அதனை விடுத்து விசாரணையையே மத்திய அரசிடம் அளிக்கிறோம் என்பது எப்படி சரியாக இருக்கும்? விசாரணையை மாற்றுபவர்கள் தனக்குக் கீழே இருக்கும் ஒரு துறை சரியாக இயங்கவில்லையென்றால் அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவார்களா?

ஏற்கனவே ஐயா பொன்.மாணிக்கவேலை பணியிட மாற்றம் செய்வதற்கான வேலை நடந்தது. பின்பு, நீதிமன்றம் அழுத்தம் காரணமாகத்தான் பணிநியமனம் நடைபெற்றது. இங்கு விசாரணை நேர்மையான திசையில் பயணிப்பதுதான் ஆள்பவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த அறநிலையத்துறை அமைச்சர்களுக்கு தெரியாது சிலைகள் கடத்தப்பட்டிருக்காது. அவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இவ்விசாரணை மாற்றம் நடக்கலாம்.

எச்.ராஜா அவர்கள் துளியும் தொடர்பற்று கோயில்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார். அப்படியென்றால், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலையும், கேரளாவிலுள்ள ஐயப்பன் கோயிலையும் மத்திய அரசு மயப்படுத்திவிட்டு இங்கு பேசினால் அது சரியாக இருக்கும். வழிபாடு, வரி, அணை பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், தேர்வு என எல்லாவற்றையும் மத்திய அரசிடமே கொடுத்துவிட்டால் மாநில அரசிற்கு என்னதான் வேலை? என்று தமிழக அரசிற்கு கேள்வியெழுப்பினார்.