Skip to main content

''இதில் பல சிலைகள் தீனதயாளனிடம் இருந்து வாங்கப்பட்டது'' - டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

 

சென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட இருநூறு ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் எனவும், இது எந்தெந்த கோவில்களுக்கு சொந்தமானது என்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மிக மிக பழமை வாய்ந்த 55 சிலைகளை கண்டுபிடித்துள்ளனர். ஒன்பதாம் நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டு என  சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த சிலைகள் கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

 

சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளி தீனதயாளன் என்ற நபர் இறந்துவிட்டார். அவர்தான் நிறைய சிலைகளை விற்பனை செய்திருப்பதாக நாம் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அந்த நபரிடம் இருந்து தான் இவர்கள் சிலையை வாங்கி உள்ளார்கள். அவர் யாரிடமிருந்து சிலைகளை வாங்கினார், எந்த கோவில்களிலிருந்து இந்த சிலைகள் திருடப்பட்டது என விசாரிக்கப்படும். கோவிலில் இருக்கக்கூடிய கற்சிலைகளுக்கு தனி அடிப்பாகம் ஒன்று இருக்கும். இந்த சிலைகளை நீதிமன்றங்கள் மூலமாக கோவில்களுக்கு கொடுப்போம். அதோடு இதனை யார் திருடியது என்பது தொடர்பான புலன் விசாரணை நடக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்