'Wrong they did; Punishment for us?'-teachers with black badges

Advertisment

அண்மையில்வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12 - ம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ(ரீல்ஸ்) வெளியிட்டிருந்தனர். அதில், மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான பத்திரிக்கை கார்டை போனிலேயே தயார் செய்து பள்ளியின் மேலே தளத்தில் வளைகாப்பு நடத்தத் தேவையான பொருட்களுடன், மாணவி ஒருவரை அமர வைத்து வளைகாப்பு நடத்துவது போன்று வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வேகமாகப் பரவியது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி கூறுகையில், 'இது மாணவிகள் தொடர்பான பிரச்சனை என்பதால் நிதானமாகத் தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளோம். மேலும் இப்போதைக்கு அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்களையும் மாணவிகளோடு அமர்ந்து சாப்பிடச் சொல்லியுள்ளோம். ஏற்கனவே பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அந்த மாணவிகளின் பெற்றோரையும் அழைத்துப் பேச திட்டமிட்டுள்ளோம்எனத் தெரிவித்திருந்தார்

தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாணவிகளின் வகுப்பு ஆசிரியை சமூண்டீஸ்வரியை பணி இடைநீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இதுகுறித்து தலைமை ஆசிரியர் பிரேமாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ரீல்ஸ் செய்து வெளியிட்ட மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன்? நடவடிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் பேசுகையில், ''வேலூர் மாவட்டத்தில் உள்ள 24 வகையான இடைநிலை கல்வி ஆசிரியர் முதல், தலைமை ஆசிரியர் வரை உள்ள அமைப்புகள் ஒன்றாக இணைந்து, அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காங்கேயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதேநேரம் மீண்டும் பணியமர்த்த கோரியும் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 450 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும், கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்வதென முடிவு செய்திருக்கின்றோம்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 4,500 ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி செய்து வருகின்றனர். வழக்கமாக ஒரு ஆசிரியர் தவறு செய்கிறார் என்றால் அவரை விளக்கம் கேட்க வேண்டும். அந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். அந்த குற்றச்சாட்டு பதிவு திருப்தி அளிக்கவில்லை என்றால் தான் அடுத்தகட்ட நடவடிக்கையாக சஸ்பென்ஷன் என்பது வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த மாதிரி எந்த நடைமுறையும் ஆசிரியர் மீது நடத்தப்படவில்லை. சின்ன விளக்கம் கூட அவரிடம் இருந்து கேட்டு பெறப்படவில்லை என்பதுதான் எங்களுக்கு கிடைக்கின்ற தகவல். மாணவர்கள் ஒரு ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால், படி என்று சொன்னாலே மாணவன் பெட்டிஷன் எழுப்புகிறான். பணி செய்வதற்கு பாதுகாப்பில்லாத சூழல் பள்ளியில் ஏற்படுகிறது' என்றார்.