Skip to main content

தவறான பாதையில் வழக்கு செல்கிறது! நிர்மலாதேவி, முருகன் ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன்,  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் கோரிய வழக்கில், இன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 

 

nirmala


ஜாமின் வழங்கக்கோரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்திருந்தார் நிர்மலாதேவி. ஆறு முறையும் ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனுவை கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

 

nirmala


இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நிர்மலாதேவி மற்றும் முருகனின் ஜாமின் மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  ‘இச்சம்பவத்தில் குற்றவாளிகள் மூன்று பேரைத் தவிர, இதன் பின்புலத்தில் இருந்த முக்கிய அதிகாரிகளைத் தப்பிக்க வைக்கும் நோக்கத்தோடு போலீசார் செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் எந்த இடத்திலும் முருகன், கருப்பசாமி மீது குற்றம் சாட்டவில்லை. பேராசிரியை நிர்மலாதேவிக்காக, புத்தாக்கப் பயிற்சி மைய இயக்குநர் கலைச்செல்வன்தான், புத்தாக்கப் பயிற்சி வகுப்பிலிருந்து நீக்கக் கூடாது என்று தேவாங்கர் கல்லூரிக்கு கடிதம் எழுதினார். காவல்துறையினரோ, கலைச்செல்வனிடம் விசாரணை நடத்தவில்லை. அதே நேரத்தில், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுக்களைக் கூறுகின்றனர். தவறான பாதையில் இந்த வழக்கு செல்கிறது. நீதிமன்றம் உத்தரவிடும் எவ்வித உத்தரவுக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் என்பதால், ஜாமின் வழங்கிட வேண்டும்.’ என்று கூறினார்.

 

nirmala

 

நிர்மலாதேவியுடன் முருகனுக்கு நேரடித் தொடர்பு உண்டா? மாணவிகளுடன் முருகன் பேசியிருக்கிறாரா? நேரடி ஆதாரம் எதுவும் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு போலீசார் தரப்பில் ‘இல்லை’ என்றே பதிலளித்திருக்கின்றனர். மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் அளவுக்கு முருகன் ஒன்றும் வசதியானவர் கிடையாது என்பதற்கு ஆதாரமாக, வங்கியில் கடன் பெற்ற விபரம் மற்றும் நகை அடமான ரசீது போன்றவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 

 


அரசுத் தரப்பில், குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளைக் கலைக்க முற்படுவார்கள். அதனால், ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பினை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்

சார்ந்த செய்திகள்