/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ki.raa (3)_0.jpg)
பிரபல எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் (வயது 99) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், எழுத்தாளர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் மதிமுகபொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கரிசல் குயில் பறந்தது; இடைசெவலில் மலர்ந்த ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர் கி.ரா." என புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் கதை இலக்கியத்தில் புதிய திசை வழியை உருவாக்கிக் கொடுத்த கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா." எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி. ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "முதுபெரும் தமிழ் எழுத்தாளர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், பெரியவர் திரு. கி. ராஜநாராயணன் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தமிழின் தனித்துவமான கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த கி.ரா.வின் மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் எனப் போற்றப்படும் கி.ரா. மறைவு அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
திமுகஎம்.பி. கனிமொழி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எழுத்தாளர் கி.ரா.வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். தூத்துக்குடி மாவட்டம், இடைச்செவல் கிராமத்தில் பிறந்த அவர், கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன், கரிசல் வட்டார அகராதியைத் தொகுத்ததன் மூலம், வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர்.
பழகுவதற்கு இனியவர். அவரை நான் பலமுறை சந்தித்தபோதெல்லாம் அவரது தெளிந்த சிந்தனையையும், நகைச்சுவை உணர்வையும் கண்டு வியந்திருக்கிறேன். சென்றமுறை பாண்டிச்சேரி சென்றபோது அவரையும் அவரது மனைவி கணவதி அம்மையாரையும் நேரில் சந்தித்து மகிழ்ந்தேன்.
இப்போது இருவருமே நம்மிடையே இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சிவக்குமார், "ஞானதந்தையை இழந்துவிட்டேன்; இலக்கிய ஆளுமை கி.ரா. மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எஎன்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)