ADVERTISEMENT

“எழுத்தாளர்களை மட்டுமல்ல, நூல்களையும் ஊக்குவிக்க வேண்டும்” - முதல்வருக்கு எழுத்தாளர் இமையம் கோரிக்கை

11:56 AM Dec 09, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்களை நூலகங்களுக்குக் கூடுதலாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், “திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக, இந்திய மற்றும் உலக அளவில் விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லத் திட்டம் என்ற பெயரில் வீடு வழங்குகிற மகத்தான, இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இலக்கிய மாமணி என்ற விருதும் வழங்கி வருகிறது. செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் வழங்கும் விருதுகளையும் காலதாமதமின்றி வழங்கி வருகிறது. மேலும், புதிதாக மாவட்டந்தோறும் இலக்கியப் பங்களிப்பு செய்தவர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது.

இப்படிப் பல போற்றத்தக்க, எழுத்தாளர்களை ஊக்குவிக்கிற அரிய செயல்களைச் செய்து வருகிற தமிழக அரசு சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்களைக் குறைந்தபட்சம் 5000 பிரதிகளாவது நூலகங்களுக்கு வாங்க வேண்டும். ஆனால், இதுவரை வாங்கவில்லை. எழுத்தாளர்களை ஊக்குவிக்கிற அதே நேரத்தில் அவர்களுடைய நூல்களைத் தமிழகம் முழுவதும் அறியச் செய்வதற்கான ஒரு முயற்சியாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துமாறு தமிழக எழுத்தாளர்களின் சார்பாக மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT